திங்கள், 17 ஏப்ரல், 2023

சட்டப்பேரவை நிகழ்வுகள் சைகை மொழியில் ஒளிபரப்பு; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 

செவித்திறன் சவால் உடையவர்களும் சட்டப்பேரவை நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வகையில் சைகை மொழியில் பதிவு செய்து வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தற்போது நடைபெறும் 2023-24-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்ச்சிகளை செவித்திறன் சவால் உடையவர்களும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் சைகை மொழி பெயர்ப்பாளர் மூலமாக சைகை விளக்க காணொலி தயாரித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வாயிலாக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.

அதன்படி, செவித்திறன் சவால் உடையவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு, யூ-டியூப் மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் ஒளிபரப்பு செய்திடும் வகையில், சைகை மொழியில் பதிவு செய்து வழங்கும் நிகழ்வினை சபாநாயகர் மு.அப்பாவு முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


source https://news7tamil.live/broadcasting-of-legislative-proceedings-in-sign-language-the-chief-minister-inaugurated.html

Related Posts: