செவ்வாய், 11 ஏப்ரல், 2023

கிணத்துக்கடவு: கனிம வளக் கொள்ளைக்கு திடீர் பிரேக்; விவசாயிகள் மகிழ்ச்சி

 Kinathukadavu

Coimbatore

தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு சிறப்பு தனிப் படைகளை அமைத்துள்ள நிலையில் கோவை கிணத்துக்கடவு பகுதியில் கடந்த 5 நாட்களாக கனிம வளக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் அதற்கு தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கனிம வளக் கொள்ளை குறித்து செய்திகள் வெளியாகின. இதையடுத்து தமிழக அரசு கனிம வளக் கொள்ளையை தடுக்கும் நோக்கில் சிறப்பு தனிப் படைகளை அமைத்துள்ளது.

இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு பகுதியில் தனிப்படை அமைத்தது முதல் கடந்த 5 நாட்களாக குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் அள்ளப்படுவது குறைந்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதோடு அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நன்றி தெரிவித்து விவசாயிகள் இன்று(ஏப்ரல் 11) மனு அளித்தனர். அதில், பாலக்காட்டு கணவாய்க்கு அருகில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் வழக்கமாக மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயம் சிறப்பாக இருந்தது. கடந்த 1 வருட காலமாக கனிம வளங்களை கொள்ளையடிக்கும் குவாரிகளால் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்பிற்குள்ளாகினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் சார்பிலும் விவசாயிகள் சார்பிலும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டது. கடந்த வாரம் தமிழக அரசு கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிறப்பு தனிப்படைகளை அமைத்தது. அதனை தொடர்ந்து கடந்த
நான்கு ஐந்து நாட்களாக குவாரிகளில் கனிம வளங்கள் எடுக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினர்.

குவாரிகளிலிருந்து கனிம வளக் கொள்ளையில் ஈடுபடும் லாரிகளின் போக்குவரத்து இல்லாததால் பொதுமக்களும் விவசாயிகளும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதற்கு தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கிறோம். இந்த நடவடிக்கை தற்காலிக நடவடிக்கையாக இல்லாமல் நிரந்தரமான நடவடிக்கையாக இருக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம் என்று கூறினர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-police-sets-special-force-to-curb-mineral-looting-634623/