வியாழன், 11 மே, 2017

மீண்டும் ஒரு சர்ச்சையில் நீட் தேர்வு May 10, 2017

மீண்டும் ஒரு சர்ச்சையில் நீட் தேர்வு


ஆடைக் கட்டுப்பாடு, நடைமுறை கெடுபிடி போன்ற காரணங்களுக்காக சர்ச்சையில் சிக்கிய நீட் தேர்வுக்கு, தற்போது மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஆங்கில மொழியில் நீட் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கும், தமிழ் வழியில் கேட்கப்பட்ட நீட் தேர்வு வினாக்களுக்கும் பெருமளவு மாறுபாடு இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த மாறுபாடு காரணமாக, நீட் தேர்வை தேசிய அளவிலான பொதுத் தேர்வாக எப்படிக் கருத முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ள மாணவ, மாணவிகள், கடந்த 7ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, நீட் தேர்வில் வேண்டுமென்றே திட்டமிட்ட முறைகேடு நடைபெற்றுள்ளதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், முறைகேடு நடைபெற்றுள்ளதால், நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான கேள்வி தாள்கள் அமைக்கப்பட்டதால், தமிழகம், மேற்கு வங்க மாநிலத்தில் கடினமான கேள்வித்தாளும், குஜராத்தில் கேள்வித் தாள்கள் எளிமையாக இருந்ததாகவும் குறை கூறியுள்ளார்.  இதன் காரணமாக தமிழகத்தின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் வேறு மாநில மாணவர்களுக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Posts: