புதன், 12 ஏப்ரல், 2023

ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் பயணிக்க தயார்

 ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரசு பயணிக்க தயாராக இருப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் தனியார் பத்திரிக்கைகளுக்கு எழுதிய கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த கட்டுரையில் அவர் தெரிவித்திருப்பதாவது..

மத்தியில் ஆளக்கூடிய  மோடி தலைமையிலான அரசு அனைத்து  அதிகாரங்களையும் தவறாகப் பயன்படுத்துகிறது . ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்களான  நீதித்துறை, நிர்வாகம், நாடாளுமன்றம் என்ற மூன்றையும் சிதைத்து வருவதை சமீபத்தில் காண முடிகிறது. நமது  நாட்டின் முக்கிய பிரச்சனைகளான பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான வன்முறைகள்,  அதானி விவகாரம், பட்ஜெட் குறித்தான கேள்விகள் போன்றவை  குறித்து யாரையும் பேச விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு நாடாளுமன்ற முடக்கத்திற்கு வழி வகுக்கிறார்கள்.

சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு  போன்ற மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளை  தவறாகப்  பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் மீது மட்டுமே 95%  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால்  குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேறு கட்சியில் இருந்து  பா.ஜ.க வில் இணைந்துவிட்டால் அவர்கள் மீதான வழக்குகள் காணாமல் போய்விடுகின்றன.

அதேபோல நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர்களின் பேச்சுகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி வருகிறார்கள். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் என தொடர்ந்து  சூழ்ச்சிகளை  செய்து முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பி எதிர்க்  கேள்விகளே இல்லாமல் 45 லட்சம் கோடி அளவுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு  தாக்கல் செய்துள்ளது.

முன்னாள்  நீதிபதிகளைத் தேச விரோதிகள் என அழைப்பதன் மூலம் தற்போது இருக்கும் நீதிபதிகளை   மத்திய சட்ட அமைச்சர் வெளிப்படையாக அச்சுறுத்தி வருகிறார். இதன் மூலம் நீதித்துறையைப்  பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இந்திய மக்களின் வாழ்வைப் பாதிக்கும் சட்ட ரீதியான  கேள்விகளுக்குக்  கூட பிரதமர் பதிலளிக்காமல் மெளனம் காக்கிறார். மத்திய அரசின் பட்ஜெட்டில், விலைவாசி ஏற்றம் குறித்தோ, வேலையில்லா திண்டாட்டம் குறித்தோ எதுவுமே  குறிப்பிடவில்லை.

அதேபோல எல்லை மாநிலங்களில் சீனாவில் ஊடுருவல் தொடர்கிறது. ஆனால் அது குறித்து கேள்வி எழுப்பினால்  மத்திய அரசு அப்பட்டமாக அதனை மறுக்கிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் குரலை அடக்கிவிடலாம் என மத்திய அரசு கருதுகிறது.  மத்திய அரசினால் மக்களின் குரலை ஒருபோதும் நசுக்க முடியாது என நான்  எச்சரிக்கிறேன்.  மக்களின் குரலைப்  பாதுகாக்க, ஜனநாயகத்தைப்  பாதுகாக்க முயற்சிக்கும் கட்சிகளோடு காங்கிரஸ் கட்சி கரம் கோர்க்கும். எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தனது கடமையை உணர்ந்திருக்கிறது. எனவே, ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்க தயாராக இருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்

மத ரீதியான விழாக்கள் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்திற்கு வழி வகுக்காமல் பிற சமூகத்தினரை அச்சுறுத்தவும் மற்றும் அவர்களை கொடுமைப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக  அமைந்து வருகின்றன. சமீபகாலமாக மதம், உணவு, சாதி, பாலினம் மற்றும் மொழியின் அடிப்படையில்  அச்சுறுத்தல் மற்றும் பாகுபாடு அதிகமாக உள்ளது. பிரதமர் மோடி இந்த நிகழ்வுகள் தொடர்பாக  அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல குற்றவாளிகளுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை  என சோனியா காந்தி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


source https://news7tamil.live/ready-to-travel-with-like-minded-parties-to-restore-democracy-sonia-gandhi.html