16 4 23 தமிழக காவல்துறையின் தீவிர கண்காணிப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று தொடங்கியுள்ளது. கொரட்டூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற உள்ள இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் துணை ஆணையர் மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டனர்.
சட்ட ஒழுங்கை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து வந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தது. பிரச்னைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்ட ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை, அதற்காக பேரணியை தடுப்பது நியாயம் இல்லை என கூறி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து காவல்துறை அனுமதியுடன் தமிழ்நாட்டின், 45 இடங்களில் ஆர்.எஸ். எஸ். அமைப்பினர், இன்று சீருடை அணிந்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கொரட்டூரில் இன்று மாலை 3 மணிக்கு அணிவகுப்பு அணிவகுப்பு தொடங்கியது. இதனை தொடர்ந்து, பேரணியின் முடிவில் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
இந்த பேரணியானது, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொரட்டூர் மத்திய நிழற்ச்சாலையில் இருந்து தொடங்கி, கிழக்கு நிழற்ச்சாலை, கொரட்டூர் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் கொரட்டூர் மத்திய நிழற்ச்சாலைக்கு வந்தடையும். சுமார் 3 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தூரம் நடைபெற உள்ள இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்த சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக, காவல் துணை ஆணையர் மணிவண்ணன், கிரி, கனகராஜ் உட்பட 10 உதவி ஆணையர்கள் மற்றும் 30 காவல் ஆய்வாளர்கள் என சுமார் 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் பேரணி நடைபெற உள்ள இடங்களில் துணை ஆணையர் மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா