செவ்வாய், 9 மே, 2023

36 மாணவர்களின் +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைப்பு; முறைகேடு நடந்ததாக புகார்!

9 5 23 

பணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், உதகையில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில், தேர்வு எழுதிய 36 மாணவர்களின் கணித பாட தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி 3-ந்
தேதி வரை நடைபெற்றது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத நீலகிரி மாவட்டத்தில்
41 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவற்றில் 3525 மாணவர்கள், 3915
மாணவிகள் என 7440 எழுதினர்.

மேல்நிலைத் தேர்வுக்காக 44 முதன்மை கண்காணிப்பாளர்கள், 43 துறை அலுவலர்கள், 86
அலுவலக பணியாளர்கள், 574 அறை கண்காணிப்பாளர்கள், 14 வினாத்தாள் வழித்தட
அலுவலர்கள் என 761 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் முறைகேடுகள் ஈடுபடுவது தவிர்க்க 69 பேர்
அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம்
மஞ்சூர் அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் 27-ந்
தேதி நடந்த கணித தேர்வில் மாணவ, மாணவிகள் ஒரு சிலருக்கு தேர்வு பணியில்
ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது.


இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான
அதிகாரிகள் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி சென்னை
பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தேர்வில் விடை எழுத மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேர் கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சாம்ராஜ் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் அறையின் 3 மற்றும் நான்கில் கணித தேர்வு எழுதிய 36 மாணவர்களின் கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தேர்வு விடைத்தாள் சென்னை தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டதால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/36-students-withheld-2-results-from-publication-reported-abuse.html