புதன், 17 மே, 2023

300-வது நாளை நோக்கி போராடும் கிராம மக்கள்: விமான நிலையம் வேண்டாமென ஜமாபந்தியில் மனு!

 

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் 293 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம்,சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4791 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து
ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த
மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகளையும் வாழ்வாதாரங்களையும் இழக்கும் கிராம மக்கள் 6 கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர் .

புதிய விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து தொடந்து 293 நாளாக ஏகனபுரத்தில்
போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வருவாய் துறையின் சார்பில் குறை தீர்க்கும் ஜமாபந்தி நிகழ்வு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூரில் சென்னையின் இரண்டாம் விமான நிலையம் அமைய சாத்தியக்கூறுகள் இல்லை என எடுத்துரைத்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர்
தொடர்ந்து 293 நாட்களாக இங்கு விமான நிலையம் அமைய கூடாது என போராடி வருகிறோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடுத்த வாரம் 300 நாள் போராட்டம்
வித்தியாசமானதாக அமையும் என்றும் எங்கள் பகுதிக்கு விமான நிலையம் வேண்டாம்
எனவும் தெரிவித்தனர்.

source https://news7tamil.live/300-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d.html

Related Posts: