16 5 23
புதிய நாடாளுமன்ற கட்டிடம் இம்மாத இறுதியில் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நமது நாடாளுமன்றம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரம்மாண்ட ஹால், நூலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், உணவுக்கூடம், விசாலமான வாகன நிறுத்த பகுதிகள் என பல்வேறு வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாகவும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டிடம் வட்ட வடிவில் இருக்கும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் இந்த புதிய நாடாளுமன்றத்தை கட்டி வருகிறது. மத்திய பாஜக அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுவதாக கூறப்படும் புதிய நாடாளுமன்ற கட்டத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அதன் திறப்பு விழாவை இம்மாத இறுதியில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காரணம், 2014ம் ஆண்டு மே 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. இதன் 9வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதனை நினைவு கூறும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/new-parliament-building-to-be-inaugurated-by-end-of-this-month-government-sources-inform.html