புதன், 17 மே, 2023

உ.பி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 61 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி; பல இடங்களில் சமாஜ்வாடி கட்சி தோல்வி

 16 5 2023

உத்தரப் பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க பெரும்பாலும் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியது. பாஸ்மாண்டாக்கள், பெண்கள், ‘அனைவருக்கும் நன்மைகள்’ ஆகியவற்றை மையமாகக் கொண்டு, 25,000 முஸ்லிம்கள் உள்ள இடங்களில் பூத்களை அமைத்துள்ளது.

உத்தரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வால் நிறுத்தப்பட்ட 391 முஸ்லிம் வேட்பாளர்களில் 61 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 5 பேர் நகர் பஞ்சாயத்துகளின் தலைவர்களாகவும், 2 பேர் மாநகராட்சி உறுப்பினர்களாகவும் மீதமுள்ள 54 பேர் வெவ்வேறு நகர் பாலிகா பரிஷத் மற்றும் நகர் பஞ்சாயத்துகளின் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

பா.ஜ.க-வின் 391 முஸ்லிம் வேட்பாளர்களில், பா.ஜ.க 351 பேரை மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் நகர் பாலிகா பரிஷத் மற்றும் நகர் பஞ்சாயத்து உறுப்பினர்களாக களம் இறக்கியது. 35 பேர் நகர் பஞ்சாயத்துகளில் தலைவர்களாகவும் 5 பேரை நகர் பாலிகா பரிஷத் தலைவர்கள் என நிறுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வால் நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களின் அதிக எண்ணிக்கை இது.

பா.ஜ.க தலைவர் ஒருவரின் கருத்துப்படி, இந்த வேட்பாளர்களில் 90%-க்கும் அதிகமானவர்கள் பாஸ்மாண்டாக்கள். முஸ்லிம்கள் அதிகம் உள்ள இடங்களில் பா.ஜ.க முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், மேயர் பதவிகளுக்கு யாரும் பரிந்துரைக்கப்படவில்லை.

மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள போஜ் தரம்பூர் ஓபிசி பெண்களுக்கான ஒதுக்கீட்டுத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் மொஹ்சினாவை 3,902 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஃபர்கண்டா ஜாபின் பா.ஜ.க-வின் வெற்றியாளர்களில் ஒருவர். ஓ.பி.சி-க்கு ஒதுக்கப்பட்ட பரேலி மாவட்டத்தில் உள்ள தௌரதண்டா தொகுதியில், பா.ஜ.க-வின் நதீம் உல் ஹசன் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடியின் வகீல் அகமதுவை தோற்கடித்தார். 13 முஸ்லீம் வேட்பாளர்களைத் தவிர, ஏ.ஐ.எம்.ஐ.எம் வேட்பாளரும் அந்த இடத்தில் களத்தில் இருந்தார்.

ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள கோபமு தொகுதியில் பா.ஜ.க-வின் வாலி முகமது நேருக்கு நேர் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளர் நௌஷாத்தை தோற்கடித்தார்.

சம்பாலின் சிர்சியில் பா.ஜ.க-வின் கவுசர் அப்பாஸ் 185 வாக்குகள் வித்தியாசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் வசீமை தோற்கடித்தார். முஸ்லிம்கள் அதிகம் உள்ள இத்தொகுதியில் 13 வெவ்வேறு வேட்பாளர்களிடையே முஸ்லிம் வாக்குகள் சிதறியது. பா.ஜ.க வேட்பாளர் 3,272 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் 3,087 வாக்குகளும் பெற்றனர். காங்கிரஸின் ஹசன் ஆரிப் 3,077 வாக்குகளும், சமாஜ்வாடி கட்சியின் முசாஹிப் உசேன் நக்வி 2,794 வாக்குகளும் பெற்றனர்.

சஹாரன்பூர் மாவட்டத்திற்குட்பட்ட சுல்தான்பூர் சில்கானா நகர் பஞ்சாயத்து தொகுதியில், பா.ஜ.க-வின் பூல்பானோ அன்சாரி, நேரடியான போட்டியில் 1,246 வாக்குகள் வித்தியாசத்தில் பி.எஸ்.பி-யின் அக்பரை தோற்கடித்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீரட் மாவட்டத்தின் சிவல்காஸ், பாக்பத் மாவட்டத்தின் ரதௌல், படவுனின் சக்கானு மற்றும் ராம்பூர் மாவட்டத்தின் கைம்ரி ஆகிய இடங்களில் பா.ஜ.க முஸ்லீம் வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர்.

ராம்பூர் மாவட்டத்தில், ராம்பூர் மற்றும் தாண்டா, படவுனில் கக்ராலா, அசம்கரில் முபாரக்பூர் மற்றும் பிஜ்னூரில் உள்ள அப்சல்கர் உள்ளிட்ட ஐந்து நகர் பாலிகா பரிஷத்களில் பா.ஜ.க-வின் முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். இருப்பினும், ராம்பூரில் இரண்டாம் இடத்தைப் பிடித்தபோது, பா.ஜ.க வேட்பாளர் 33% அதிக வாக்குகளைப் பெற்றார். அதே போல், அப்சல்கரில் பா.ஜ.க வேட்பாளர் 37% வாக்குகளைப் பெற்றார்.

ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சுவார் நகர் பஞ்சாயத்தில் அப்னா தளம் (சோனேலால்) வேட்பாளர் ரேஷ்மா பர்வீன் 40% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்னா தளம் (எஸ்) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியாகும். சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடவில்லை.

மேலும், 2017ல், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் நகர் பாலிகா பரிஷத் உறுப்பினர்களுக்கு, சில இடங்களில், முஸ்லிம்களுக்கு, பா.ஜ.க சீட்டு வழங்கிய நிலையில், முஸ்லிம் வாக்காளர்களின் ஆதிக்கத்தால், பல இடங்களில், போட்டியிட, வேட்பாளர்கள் கிடைக்கவில்லை என, அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு நேர்மாறாக, இந்த ஆண்டு, பா.ஜ.க-வின் முஸ்லிம் வேட்பாளர்கள் இருவரும் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் வெற்றி பெற்றனர் – லக்னோவின் ஹுசைனாபாத் வார்டில் இருந்து லுபானா அலி கான் (47% வாக்குகள்) மற்றும் கோரக்பூரில் உள்ள பாபா கம்பீர்நாத் வார்டில் இருந்து ஹக்கிகுன் நிஷான் (38% வாக்குகள்) பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

“உள்ளாட்சித் தேர்தலில் 391 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியதன் மூலம், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க மீது முஸ்லிம்களின் ஆதரவையும் விருப்பத்தையும் சோதித்து, நல்ல பதிலைப் பெற்றுள்ளது” என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.

பாஜக மாநிலத் தலைவர் பூபேந்திர சவுத்ரி கூறுகையில், “அனைவரையும் அழைத்துச் செல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். எனவே, அனைத்து அரசு திட்டங்களின் பலன்கள், எந்தவித பாகுபாடும் இல்லாமல், வெளிப்படையாக அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மோடி மீது முஸ்லிம்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மேலும், அனைத்து பிரிவினரும் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கிறார்கள்” என்று கூறினார்.

பாஜக-அப்னா தளம் (எஸ்) கூட்டணி வெற்றி பெற்ற சுவாரில் 90% வாக்காளர்கள் முஸ்லிம்கள் என்று சவுத்ரி சுட்டிக்காட்டினார்.

“சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் நீண்ட காலமாக முஸ்லிம்களிடையே பா.ஜ.க-வைப் பற்றி அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், முஸ்லிம்கள் அதிலிருந்து வெளியே வந்துள்ளனர். பாஜக மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், சமீபத்திய தேர்தல்களில் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் பா.ஜ.க-வில் சீட் கேட்டிருந்தனர்” என்று பா.ஜ.க-வின் சிறுபான்மை மோர்ச்சாவின் உ.பி. மாநிலத் தலைவர் குன்வர் பாசித் அலி கூறினார். மோர்ச்சாவின் பல்வேறு பிரச்சாரங்கள் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெற உதவியது என்றும், 2017-ம் ஆண்டில், 44,000 முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பூத்களில் பா.ஜ.க-வால் அதன் பூத் கமிட்டிகளை நிறுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால், 2023 தேர்தல் நேரத்தில், இந்த 25,000 முஸ்லிகள் உள்ள பகுதிகளில் பூத் கமிட்டிகளை அமைக்க முடிந்தது என்று கூறினார்.


source https://tamil.indianexpress.com/india/bjp-muslim-candidates-win-in-up-ulb-polls-in-many-seats-beat-sp-670670/