செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

சென்னையில் தந்தை மகன் உயிரை பறித்த நீட் தேர்வு: அடுத்தடுத்து தூக்கில் தொங்கிய பரிதாபம்

 14 8 23

Chennai
Chennai NEET aspirant and his father dies by suicide

சென்னை குரோம்பேட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர், இறந்த விரக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை குறிச்சி நகரில் வசித்த வந்தவர் செல்வசேகர். இவரது ஒரே மகன் ஜெகதீஸ்வரன்(19). கடந்த 2021 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் மூலம் 12ஆம் வகுப்பு முடித்த இவர் ‘ஏ’ கிரேட் கேட்டகிரியில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

அதன் பிறகு மருத்துவம் படிக்கும் எண்ணத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இதற்காக தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து, 2 முறை நீட் தேர்வு எழுதினார். ஆனால் ஜெகதீஸ்வரன் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார்.

இதனிடையே தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் இருந்த ஜெகதீஸ்வரன் சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை, ” என் பிள்ளை போன்ற மாணவர்கள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் அது நிறுத்தப்பட வேண்டும் என்றால் இந்த நீட் தேர்வை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

செல்வ சேகர் மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மகன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த செல்வம் இன்று அதிகாலை மாடியில் உள்ள அறையில் கேபிள் வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வு தோல்வியால் தந்தையும், மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-neet-aspirant-father-dies-by-suicide-738664/