செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

ஹிஜாப் அணிந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு: பள்ளி மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார்!

 

ஹிஜாப் அணிந்து வந்ததால் இந்தி தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஷபானா, பள்ளி நிர்வாகத்தின் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். 

திருவண்ணாமலையை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நேற்று இந்தி தேர்வு எழுதுவதற்காக 500க்கும் மேற்பட்ட மாணவிகள் காலை முதல் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அப்போது திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த அரபு ஆசிரியை சபானா என்பவர் ஹிஜாப் அணிந்து கொண்டு ஹிந்தி மதிமா என்ற தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளார். ஹால் டிக்கெட் காண்பித்து உள்ளே சென்ற அவருக்கு கேள்வி தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் சில நிமிடங்களில் ஹிஜாப் அணிந்து வந்ததால் அவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில், ஷபானா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம், ஹிஜாப் அணிந்து வந்ததால் இந்தி தேர்வு எழுத அனுமதி மறுத்த பள்ளி நிர்வாகம் மீது இன்று புகார் அளித்தார். அப்போது ஹிஜாப் அணிந்ததால் பள்ளி நிர்வாகம் தன்னை மிகவும் தரக்குறைவாக பேசியதாகவும், அதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக இந்தி தேர்வு மீண்டும் எழுத முடியாத நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தன்னிடம் நடந்து கொண்ட முறையில் உடல்ரீதியாக பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் தான் அணிந்து வந்த ஹிஜாபை பற்றி பள்ளி நிர்வாகத்தினர் மிகவும் தரக்குறைவாக பேசியதாகவும், பள்ளி அறையில் ஹிஜாபை கழட்டி விட்டு தேர்வு எழுத அனுமதி கொடுங்கள் என்று கூறியும் பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் தேர்வில் அனுமதி மறுக்கப்பட்டு தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஷபானா மனு அளித்துள்ளார்.

source https://news7tamil.live/the-matter-of-being-denied-permission-to-write-an-exam-because-of-wearing-a-hijab-complaint-to-the-district-collector.html