புதன், 30 ஆகஸ்ட், 2023

நிலவில் ஆக்சிஜன், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்களை உறுதி செய்த பிரக்யான் ரோவர் – இஸ்ரோ அறிவிப்பு..!

 

நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரையிறங்கிய ரோவர் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை உலகின் பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றன.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து, ரோவர் பத்திரமாக தரையிறங்கியது. ரோவர் பிரிந்து நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு புதிய அப்டேட்களையும் இஸ்ரோ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம் இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, நிலவின் தென்துருவ மேற்பரப்பில் கந்தகம், அலுமினியம், கால்சியம், சல்ஃபர், இரும்பு, குரோமியம், சிலிக்கான், டைட்டானியம், மாங்கனீஸ் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளது. லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி (LIBS) மூலம் பிரக்யான் ரோவர் நிலவில் உள்ள தனிமங்களை கண்டறிந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

source https://news7tamil.live/pragyan-rover-confirmed-elements-including-oxygen-and-aluminum-on-the-moon-isro-announcement.html