தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்து உள்ளது, மேலும் தனிநபர் வருமானம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது, விலைவாசி உயர்வை எடுத்துக் கொண்டால், நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. 2021-22ல் இங்கு பணவீக்கம் 7.92 சதவீதமாகவும், 2022-23ல் 5.97 சதவீதமாகவும் காணப்பட்ட நிலையில், மத்திய அரசின் கணக்கை எடுத்துக் கொண்டால், 2021-22ல் 9.31 ஆகவும், 2022-23ல் 8.82 ஆகவும் உள்ளது.
2021 ஆம் ஆண்டு கணக்கை எடுத்துக் கொண்டால், மத்திய அரசில் பணவீக்கம் 9.3 சதவீதம், தமிழகத்தைப் பொறுத்தவரை 7.92%. 2022 ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு 8.82% ஆக உயர்ந்திருந்தபோது தமிழகம் 5.97 சதவீதமாக இருக்கிறோம். பணவீக்க விகிதாசாரத்தை எடுத்துக் கொண்டால், தமிழகம் இந்திய ஒன்றிய அளவைவிட குறைவாக இருக்கிறோம்.
இந்தியாவில் தனிநபர் வருமானம் சராசரியாக 98 ஆயிரத்து 374 ரூபாயாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலையில் 20 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 2022-23 ஆம் ஆண்டுக்கான நடப்பு விலையில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு 23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடி ரூபாயாக உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் நாட்டின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது. இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.1 சதவீதமாக உள்ளது. 2021-22 ஆம் ஆண்டு நிதியாண்டில் 7.92 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022-23 ஆம் நிதியாண்டில் 8.19 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2011-12 நிதியாண்டு முதல் 2017-18 நிதியாண்டு வரை, ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது சமச்சீராக இல்லாமல், ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. 2018க்குப் பிறகு கோவிட் பெருந்தொற்று வந்தபிறகு, பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரிய சரிவு வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சரிவில் இருந்து மீண்டும் கிட்டத்தட்ட 8 சதவீதம் என்ற அளவில் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த வளர்ச்சி எதிர்மறையாக இருந்தபோது, தமிழகப் பொருளாதாரம் நேர்மறையாக ஒரு நிலையான இடத்தில்தான் இருந்தது. அதன்பிறகு தமிழகத்தின் பொருளாதார நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதற்கு காரணம், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடந்துள்ள திராவிட மாடல் அரசின் திட்டங்கள், அவர் வகுத்துள்ள பொருளாதார நோக்கங்கள், மாநில திட்டக் குழுவின் ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகள் தான். தமிழகம் மின்னணு ஏற்றுமதி முன்னணியில் உள்ளது. ஏறத்தாழ இரண்டரை லட்சம் கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் வந்திருக்கிறது என்றால், இதற்கு அடிப்படையான காரணம் முதல்வர்தான். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/thangam-thennarasu-says-tamil-nadu-economy-and-per-capita-income-increases-745123/