“டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். காரணம் என்ன? என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்” என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வலியுறுத்தினார்.
மேலும், அ.தி.மு.க-வை எதிர்க்க எந்த கட்சியாலும், நபராலும் முடியாது என எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பான கருத்துக்கு அ.தி.மு.க-வை அழிக்க நாங்க நினைக்கவில்லை. அவங்க எங்கள் பங்காளி, நாங்கள் எல்லாம் ஒரே பிராண்டு. பா.ஜ.க மற்றும் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பார். டெல்லியில் இருந்து அடித்துக்கொண்டே இருந்தால், எவ்வளவுதான் தாங்குவார்.” என்று தெரிவித்தார்.
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்.எஸ். பாரதி கூறியதாவது: “சென்னை தினத்தை ஏன் மெட்ராஸ் தினம் என கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறி இருக்கிறார்.திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த கவர்னர் ஆர்.என்.ரவி நினைக்கிறார்.
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியது அவரது விருப்பம். அ.தி.மு.க-வினர் எடப்பாடி பழனிசாமியை புரட்சி தமிழர் என்று அழைப்பதன் மூலம் எம்.ஜி.ஆர் மலையாளி, ஜெயலலிதா கன்னடம், நான் ஒருத்தர் மட்டும்தான் தமிழர் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரோ என்று தோன்றுகிறது. இது தி.மு.க-வின் கருத்து அல்ல, என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று கூறினார்.
“தன்னுடைய ஆட்சியில் சமூக நீதியை எப்போதும் நிலைநாட்டியவர் கலைஞர். கலைஞர் போன்று சமூக நீதி அடிப்படையில் சைலேந்திரபாபுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்தார். டி.என்.பி.எஸ்.சி தலைவராக முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபுவை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். ஆளுநர் கேட்ட சந்தேகங்களுக்கு அரசு சார்பில் உரிய விளக்கம் கொடுத்தும் ஒப்புதல் தரவில்லை. ஆளுநர் ரவி தன்னுடைய நடவடிக்கைக்கான விலையை தர நேரிடும். ஆளுநர் ரவி தன்னுடைய வேலையை தவிர பிற வேலைகளை மட்டுமே செய்துவருகிறார்.
தமிழ்நாட்டு மக்களை சீண்டிப் பார்க்கும் வேலையை ஆளுநர் ரவி செய்கிறார். திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சி செய்கிறார். சைலேந்திரபாபு நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காதது குறித்து ஆளுநர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அனைவரும் ‘சென்னை டே’ என்று கூறும்போது ஆளுநர் ரவி மட்டும் மெட்ராஸ் டே எனக் குறிப்பிடுகிறார். அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்காகவே சைலேந்திரபாபுவுக்கு நியமனம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிராக பாடத்திட்டங்கள் குறித்து பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுகிறார்.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தான் நீட் தேர்வு உள்ளே நுழைந்தது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு வந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் பொறுப்பு.” என்று ஆர்.எஸ். பாரதி கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-rs-bharathi-says-governor-trying-to-create-turmoil-aiadmk-is-our-partner-we-are-all-one-brand-742176/