கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இவற்றை நீதிமன்றம் உத்தரவுபடி கடந்த 9-ம் தேதி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
அப்போது, அங்கே பட்டா நிலத்தில் கட்டப்பட்ட 3 வீடுகளின் முன்பகுதி சுவர் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், அந்த வீடுகளின் முன்பகுதி சுவர்களை அகற்றியபோது, அந்த வீடுகளின் ஒரு பகுதி சேதமடைந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், பட்டா நிலத்தில் உள்ள வீட்டை சேதப்படுத்திய வருவாய்த்துறை அதிகாாிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு, தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், பணி இட நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்து அவருக்கு அதே இடத்தில் பணி வழங்கக் கோரியும் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அங்கே வந்து காத்திருப்பு போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல கேட்டுக்கொண்டார். போராட்டக்காரர்கள் சம்மதிக்காதால் காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு வருவாய் துறை சங்கத்தினர் அனைவரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் வைத்தனர். இதனால், கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தனி வட்டாட்சியர் மனோஜ் முனியனை, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையினர் பணிகளைப் புறக்கணித்து புதன்கிழமை (ஆகஸ்ட் 30) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/revenue-dept-staffs-protest-to-condemns-to-suspends-tahsildar-746220/