குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் க்ரஹ லட்சுமி திட்டம் நாடு முழுவதும் பின்பற்றப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை அறிவித்தார்.
மைசூருவில் கர்நாடக அரசின் இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், இந்த திட்டம் பெண்களுக்கான பாதுகாப்பு வலையாக அமையும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கர்நாடகாவில் எங்களின் ஐந்து திட்டங்களும் வெறும் திட்டங்கள் அல்ல; அது ஒரு ஆட்சி மாதிரி. ஏழை மற்றும் நலிந்தவர்களுக்காக அரசு பாடுபட வேண்டும்.
மதம், ஜாதி, மொழி வேறுபாடின்றி யாரும் பின்தங்கி விடக்கூடாது என்பதே நமது சிந்தனை. கர்நாடகாவில் பெண்களுக்கு என்ன செய்தோமோ, அதை நாடு முழுவதும் பிரதிபலிக்க உள்ளோம். மேலும் நாட்டிற்கு கர்நாடகம் வழி காட்டுகிறது” என்றார்.
தொடர்ந்து, “உலகில் எங்கும் பெண்களுக்கு அரசாங்கம் இவ்வளவு பெரிய தொகையை வழங்கவில்லை,” என்றார். இதையடுத்து, “காங்கிரஸ் இந்தத் திட்டத்தை அறிவித்தபோது, அதைச் செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு கூறியது. ஆனால் உண்மை உங்கள் முன்னால் உள்ளது.
இன்று ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களின் கணக்குகளுக்கு 2000 ரூபாய் கிடைத்துள்ளது. பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறார்கள். குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி கிடைக்கிறது” என்றார்.
கர்நாடகத்தில் காங்கிரஸின் 5 உத்தரவாதங்களில் ஒன்றான இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நான்காவது திட்டமாகும். இதில், 1.15 கோடி பயனாளிகள் உள்ளனர்.
ஏற்கனவே பெண்களுக்கு சக்தி இலவச பேருந்துப் பயணம், அன்ன பாக்யா – பிபிஎல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் 10 கிலோ அரிசி மற்றும் ஒவ்வொரு மாதமும் வீடுகளுக்கு 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம், முன்பு தொடங்கப்பட்டுவிட்டன.
ஐந்தாவது திட்டமான யுவ நிதி இளைஞர்களுக்கு வேலையில்லா உதவித்தொகை வழங்கும் திட்டம் டிசம்பர் அல்லது ஜனவரியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/cong-to-replicate-karnatakas-gruha-lakhmi-cash-transfer-scheme-for-women-across-india-rahul-gandhi-746106/