புதன், 30 ஆகஸ்ட், 2023

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல்: அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை

 29 8 23


Senthil Balaji bail petition, Senthil Balaji, ED, Senthil Balaji request for urgent hearing bail petition, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல், செந்தில் பாலாஜி அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை, Senthil Balaji bail petition, Minister Senthil Balaji request for urgent hearing
செந்தில் பாலாஜி

அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தது. அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியைக் கைது செய்தது சட்டப்படி சரியானது என உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தது.

அமலாக்கத்துறை விசாரணையை முடித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியது. மேலும், செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகை, 3,000 பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்தது.

இதைத் தொடா்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை சென்னை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டாா்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 25-ம் தேதி முடிவடைந்ததையடுத்து, அவா் சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 28-ம் தேதி நீட்டித்து உத்தரவிடப்பட்டது. மேலும், அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்படுத்தவும் சிறைத் துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

அதன்படி, செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜா்படுத்தப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே ஜாமீன் கோரியிருந்த நிலையில், ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாது எனவும், ஜாமீன் வேண்டுமானால் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தை நாடுங்கள் என உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சென்னை முதன்மை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் செவ்வாய்க்கிழமை காலை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

credit https://tamil.indianexpress.com/tamilnadu/senthil-balaji-bail-petition-and-request-for-urgent-hearing-745608/