வியாழன், 31 ஆகஸ்ட், 2023

மும்பையில் எதிர்க்கட்சி கூட்டம்; “இந்திய” கூட்டணியின் சின்னம், கொள்கை முழக்கம் வெளியிட திட்டம்… தலைமை ஏற்கிறதா திமுக ?

 31 08 2023 

எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம் மும்பையில் இன்று கூட உள்ள நிலையில், கூட்டத்தில் என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்பது குறித்து இன்றைய சொல் தெரிந்த சொல் பகுதியில் பார்க்கலாம்.

இந்தியா” கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. நாளையும்  நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் “இந்தியா” கூட்டணியின் சின்னம் மற்றும் கொள்கை முழக்கம் வெளியிடப்பட இருக்கு.

இதுவரை இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநிலங்களில் கூடி ஆலோசனை நடத்தி வந்த எதிர்க்கட்சிகள், தற்போது ஆளும் பாஜக மாநிலமான, மகராஷ்ரா தலைநகர் மும்பையில் கூடி ஆசோசனை நடத்த உள்ளது.

மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேசிய ஜனநாயக கூட்டணியும், மறுபுறம் இந்திய கூட்டணி என இருபெரும் கூட்டணிகள் தீவிரம் காட்டி வந்தாலும், இதில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மீது பலரது கவனம் குவிந்து இருக்குனே சொல்லலாம். ஏனெனில் இந்த கூட்டணியில் பல முக்கிய மாநில கட்சிகள், இருப்பது தான் கூடுதல் முக்கியத்துவம் பெற்று இருக்கு.

அதுமட்டுமின்றி இந்த ஆலோசனை கூட்டத்தில், வரவிருக்கும் 5 மாநில தேர்தல்கள் குறித்தும், கூட்டணியின் கொள்கை என்ன? பிரதமர் வேட்பாளர் பெயர் பரிந்துரை, தொகுதி பங்கீடு, பிரச்சார வியூகம், தேர்தல் அறிக்கை மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டம் என பல்வேறு விஷயங்கள் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது 38 கட்சிகள் இருக்கும் நிலையில், ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால், 4 லிருந்து, 5 கட்சிகள் இந்திய கூட்டணிக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் மிக முக்கியமாக இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் எனவும் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கு.

ஒருபுறம் இந்திய கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற கருத்தும் நிலவிவருகிறது. ஆனால் மற்றொருபுறம் அதிக எம்பிகள் கொண்ட கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அப்படி பார்த்தோம் என்றால், மக்களவையில் காங்கிரஸுக்கு 52 எம்பிகளும், திமுகவுக்கு 24 எம்பிகளும், திரிணாமுல் காங்கிரஸுக்கு 22 எம்பிகளும், நிதிஷ்குமாரின் JDU-வுக்கு 16 எம்பிகளும் உள்ளனர். இதனால் “இந்தியா” கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு திமுகவுக்கு அதாவது தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்படலாம் எனவும், ஒருவேளை திமுக இப்பொறுப்பை நிராகரித்தால் அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, ஐக்கிய முன்னணி மற்றும் தேசிய முன்னணி என எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்டமான கூட்டணியை உருவாக்குவதில் மிக முக்கியமான பங்களிப்பு வகித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இடம்பெற்ற போது குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, கடும் இந்துத்துவா போக்கை செயல்படுத்தாத வகையில் பார்த்துக் கொண்டதும் கருணாநிதிதான்.

அந்தவகையில் தற்போது மீண்டும் திமுகவை நோக்கி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு வருவதாக கூறப்படுகிறது. இதனை திமுக தலைமை ஏற்குமா? நிராகரிக்குமா? என்பது இந்த கூட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும்.

source https://news7tamil.live/opposition-meeting-in-mumbai-the-plan-to-publish-the-symbol-and-slogan-of-the-india-alliance-is-dmk-taking-the-lead.html