தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 4 நாள்கள் சுற்றுப்பயணமாக டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல இன்று திருச்சி வந்தார். திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்லும் வழியில் திருவெறும்பூரில் முதல்வரிடம் மனுக்களை கொடுக்க சமூக ஆர்வலர்கள் காத்திருந்தபோது அவரது வாகனம், அவர்களை கண்டும் காணாது கடந்து சென்றது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான மாதம் ஒருமுறை மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரி திருவெறும்பூர் பகுதியில் முதல்வரிடம் மனு கொடுக்க சமூக ஆர்வலர் ஒருவர் காத்திருந்தார்.
இது குறித்து சமூக ஆர்வலர் அன்பழகன், “2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தனர்.
அதில் ஒன்று மின் கட்டண சுமையை குறைக்கும் விதமாக மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது ஒன்றாகும்.
ஆனால், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அந்த மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்தவில்லை.
இதனால் பொதுமக்களும் ஏழை எளிய அப்பாவிகளும் மின் கட்டண சுமையால் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/a-social-activist-who-was-waiting-to-petition-stalin-743434/