30 08 2023
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ.200 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரூ.200 கூடுதல் மானியத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இதைத் தொடர்ந்து, பயனாளிகள் இப்போது மொத்தம் ரூ.400 குறைவாக சிலிண்டரை பெறலாம்.
இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில், “விரைவில் பெட்ரோல் விலையும் குறையலாம்” எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி? சமையல் காஸ் விலையை ரூ200 குறைத்திருப்பதே அறிகுறி!
ரூ1100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்! வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “சமையல் எரிவாயு விலை அனைத்து நுகர்வோருக்கும் ரூ.200 குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய சமையல் எரிவாயு இணைப்புகளையும் அரசாங்கம் இலவசமாக வழங்கும்” எனத் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/p-chidambaram-on-cooking-gas-price-reduction-746157/