புதன், 30 ஆகஸ்ட், 2023

ஜம்மு-காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமல்ல” – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..!

 

ஜம்மு-காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமல்ல எனவும், அந்த அந்தஸ்து தொடா்பாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ  ஆளும் பாஜக அரசு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்பது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின்  நீண்டகால  செயல் திட்டங்களில் ஒன்றாகும். மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தினம்தோறும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல்சாசன அமா்வு தொடா்ந்து விசாரித்து வருகிறது.

அந்த வகையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களைக் கூறி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:

”தேசிய பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, ஜம்மு-காஷ்மீரை மறுசீரமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பதில் உச்சநீதிமன்றம் உடன்படுகிறது. இருப்பினும் நாட்டில் ஜனநாயகம் நிலவுவது முக்கியம். ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகம் இல்லாததை காலவரையின்றி அனுமதிக்க முடியாது. இது முடிவுக்கு வரவேண்டும்.

அங்கு தோ்தலை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகம் மீண்டும் எப்போது கொண்டுவரப்படும் என்ற காலக்கெடுவை மத்திய அரசிடம் கேட்டு உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும்” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அட்டா்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆகியோரிடம் கேட்டுக்கொண்டனா்.

இதையடுத்து, துஷார் மேத்தா வாதிடுகையில், ”ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமானதல்ல. அதேவேளையில், யூனியன் பிரதேசமாக லடாக் சிறிது காலம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்குக்கு வழங்கப்பட்டுள்ள யூனியன் பிரதேச அந்தஸ்தின் வருங்கால நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தாா்.


credit https://news7tamil.live/union-territory-status-for-jammu-and-kashmir-is-not-permanent-central-governments-reply.html