புதன், 30 ஆகஸ்ட், 2023

தோல்வி பயத்தால் சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது – காங்கிரஸ் விமர்சனம்..!

 29 8 23

தோல்வி பயத்தால் பிரதமர் நரேந்திர மோடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஒரு சிலிண்டர் ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிய நிலையில் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைதொடர்ந்து, வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். ரக்சாபந்தனையொட்டி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த பரிசு இது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் ஆயிரத்து 118 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 200 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிலிண்டர் 918 ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிலிண்டர் விலை குறைப்பு தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

“நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் சிறுவிஷயத்தையாவது பிடித்துக்கொண்டு கரையேர பாஜக நினைக்கிறது. இந்தியா கூட்டணியின் 2 கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 3வது கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைய சமையல் எரிவாயு மற்றும் உருளை விலையேற்றமே முக்கியக் காரணம். தோல்வி பயத்தால் தற்போது சமையல் எரிவாயு விலையை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார்” இவ்வாறு தெரிவித்தார்.


source https://news7tamil.live/the-price-of-cooking-cylinder-has-been-reduced-due-to-the-fear-of-failure-congress-criticizes.html