ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

சந்திரயான்-3 வெற்றி ஒரு மகத்தான அறிவியல் சாதனை;

 

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செலுத்திய ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது மகத்தான அறிவியல் சாதனை என பாகிஸ்தான் பாராட்டியுள்ளது.

நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரையிறங்கிய ரோவர் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை உலகின் பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூாச் நேற்று கூறியதாவது:

நிலவில் சந்திரயான் – 3 தரையிறங்கியது மிகப் பெரிய அறிவியல் சாதனை. இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த சாதனைக்கும், பெருமைக்கும் தகுதியானவர்கள்.
வளர்ச்சி அடைந்த நாடுகள், மிக அதிக செலவில் இதுபோன்ற சாதனையை மேற்கொள்ளும் நிலையில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த அபார சாதனையை படைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரோவின் சாதனையை பல நாடுகளும் பாராட்டிய நிலையில், பாகிஸ்தான் அரசு மவுனமாக இருந்தது. ஆனாலும், பாகிஸ்தானிலிருந்து வெளியாகும், ‘டான், எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ போன்ற முன்னணி நாளிதழ்கள், இதை முதல் பக்கத்தில் வெளியிட்டதுடன், இந்தியாவின் சாதனையை புகழ்ந்தும் எழுதியிருந்தன. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு சார்பிலும் தற்போது அதிகாரப்பூர்வமாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/chandrayaan-3-success-was-a-great-scientific-achievement-appreciate-pakistan.html