29 8 23
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா என்னும் திட்டம் மீண்டும் குலக்கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு முயற்சி.
குலத் தொழில் என்ற பெயரில் இதனை ஊக்கப்படுத்த ரூ.13 ஆயிரம் கோடியை பிரதமர் ஒதுக்கியிருக்கிறார். இது விரும்புகிறவர்களுக்கு விரும்பும் தொழிலை கற்றுக் கொள்ள திட்டம் இல்லை.
இது பரம்பரை பரம்பரையாக குடும்ப தொழிலை செய்துவரும் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கி அவர்களின் திறமையை மேம்படுத்த நிதி உதவி தருகிறோம் என்கிறார்.
அதாவது துணி வெளுக்கும் நபர்களுக்கு அந்தத் திறன் ஏற்கனவே உள்ளது. அதை மேம்படுத்தும் திட்டம் என்பது போன்று உள்ளது. ஆகவே இது குலக்கல்வி திட்டத்தின் மறுவடிவம் தான் இது.
இந்தத் திட்டத்தை எதிர்த்து வரும் செப்டம்பர் 6ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார். மேலும் இந்தத் திட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கடுமையாக எதிர்க்கின்றன எனவும் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் நடந்தது. இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளும் எனவும் எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/notice-of-protest-against-the-vishwakarma-yojana-project-on-september-6-745665/