வியாழன், 31 ஆகஸ்ட், 2023

மாநிலக் கல்விக் கொள்கை வரைவு செப்டம்பர் இறுதியில் சமர்பிக்கப்படும்!” – ஒய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தகவல்

 30 08 2023 

மாநிலக் கல்விக் கொள்கை வரைவு அடுத்த மாதம் செப்டம்பர் இறுதியில் சமர்பிக்கப்படும் என ஒய்வு பெற்ற நீதிபதியும்,  தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை குழுத் தலைவருமான முருகேசன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டிற்கு தனித்துவமான மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வுப்பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்களின் பரிந்துரைகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்ட இறுதி வரைவு அறிக்கையின் மீது விவாதிக்கப்பட்டது. அதற்கு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். தமிழ்நாட்டிற்கு தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தமிழ்நாட்டிற்கான தனி கல்விக் கொள்கை தொடர்பாக பல தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிந்தது. கல்வியாளர்கள், அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டு அறிந்து உள்ளனர்.

மேலும் அறிக்கைகளை எழுத்து வடிவமாக்கும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கான கருப்பொருள்களையும் வடிவமைத்து வந்தனர். ஆனால் இந்தக்குழுவின் காலம் 2023 மே மாதம் முடிவந்த நிலையில், பணிகளை முடிப்பதற்கு செப்டம்பர் மாதம் வரையில் கால அவகாசம் கேட்டது உயர்மட்டக்குழு. அதனை ஏற்று தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் வழங்கி உள்ளது.

தமிழ்நாடு மாநிலக் கல்விக்குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு தரப்பினரிடம் பெற்றக் கருத்துகளைத் தொகுத்து வந்தனர். மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும் , தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறுத் தரப்பில் இருந்தும் பெறப்பட்ட கருத்துகளை தொகுத்து பரிந்துரையாக செப்டம்பர் மாதம் அரசிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குழுவின் உறுப்பினர்களின் கருத்தை கேட்டு ஒப்புதல் பெறுவதற்கு குழுவின் தலைவரும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதிபதியுமான முருகேசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு , இறுதிச்செய்யப்பட்டுள்ள வரைவு அறிக்கைகைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர்.

இது குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதியும், குழுவின் தலைவருமான முருகேசன் கூறியதாவது:

தமிழ்நாட்டிற்கான தனிக்கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பிலும் கருத்துகள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையிலும், குழுவின் உறுப்பினர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையிலும் இறுதி வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

அதனை குழுவின் உறுப்பினர்களுடன் கலந்து பேசி இறுதி செய்துள்ளோம். உறுப்பினர்கள் மேலும் கருத்துகளை கூறினால் அதனையும் சேர்க்க முடியுமா? எனவும் ஆலோசிக்க உள்ளோம்.

மேலும் வரைவு அறிக்கையை தமிழ்மாெழியிலும் மொழிப்பெயர்க்க வேண்டி உள்ளது. அந்த அறிக்கையை செப்டம்பர் இறுதி வாரத்தில் அரசிடம் சமர்பிக்க உள்ளோம். பொது மக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை உள்ளடக்கியதாக மாநிலக் கல்விக் கொள்கையின் வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒய்வு பெற்ற நீதிபதியும், குழுவின் தலைவருமான முருகேசன் கூறினார்.

source https://news7tamil.live/draft-state-education-policy-to-be-submitted-by-end-of-september-information-from-retired-justice-murugesan.html