செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

திருச்சியில் விவசாயிகள் திடீர் முற்றுகை: பொறுமையாக பதில் சொன்ன உதயநிதி

 Farmers besieged Minister Udayanidhi's car causing stir, அமைச்சர் உதயநிதி காரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு, திருச்சி, உதயநிதி, அய்யாக்கண்ணு, Ayyakannu, Farmers besieged Minister Udayanidhi's car causing stir

அமைச்சர் உதயநிதி காரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் திடீரென அவரது காரை வழிமறித்து கோரிக்கை மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்தார். நேற்றிரவு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இளைஞரணியினருடன் கலந்துரையாடினார். பின்னர், திருச்சி மத்திய பேருந்துநிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்தார்.

அதைத்தொடர்ந்து இன்று அரியலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சத்திரம் பேருந்து நிலையம் வழியாக அரியலூருக்கு காரில் பயணமானார்.

அப்போது கடந்த 30 நாட்களாக சத்திரம் அண்ணா சிலை அருகாமையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் திடீரென அவரது காரை வழிமறித்து கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அய்யாக்கண்ணு கொடுத்த மனுவில், மோடி அரசு வாக்குறுதி அளித்தபடி விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்கு மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கடனுக்காக வங்கிகள் கொடுக்கும் நெருக்கடியை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன.

மேலும் 2016-ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால், விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.

மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம் என தெரிவித்ததோடு, டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வாங்கித்தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மனுவை பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

தினமும் விதவிதமான போராட்டங்கள் நடத்தி வரும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 32-வது நாளான இன்றைய தினம் மனித எலும்புத்துண்டுகளை கடித்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க. சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/farmers-besieged-minister-udayanidhis-car-causing-stir-745201/