வியாழன், 31 ஆகஸ்ட், 2023

உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது!

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், 10 வருடங்களுக்கு பிறகு அவ்வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகவும், வருவாய் துறை அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 2012ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கியாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

கடந்த 2012ஆம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ் விடுவிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், 10 வருடங்களுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கு நாளை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாக கூறி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஓபிஎஸ் மீதான வழக்கை தாமக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/10-year-old-asset-hoarding-case-against-ops-high-court-takes-up-hearing-on-its-own-initiative.html