வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

தமிழக வரலாற்றில் முதல் முறையாக வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்கத்தில் தேர்தல்: 3 இடத்திற்கு 18 பேர் போட்டி

 24 9 23 

முதல் முறையாக வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்கத்தில் தேர்தல்
முதல் முறையாக வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்கத்தில் தேர்தல்

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்கத்தில் தேர்தல் நடைபெறுகிறது.

‘தமிழ்நாடு வழக்கறிஞர் குமாஸ்தா நல நிதி கமிட்டி’ ( Tamilnadu Advocate Clerk Welfare fund committee ) என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. தமிழ்நாடு – பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர்தான் இதற்கும் தலைவர். இந்த கமிட்டியில் ஏழு உறுப்பினர்களாக ஹோம் செகரட்டரி, பைனான்ஸ் செகரட்டரி, சட்டத்துறை செகரட்டரி உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் உள்ளனர். இவர்களை தவிர 3 குமாஸ்தாக்கள் கொண்டது இந்த சங்கம்.

இதுவரை இந்த மூன்று குமாஸ்தாக்களை வழக்கறிஞர் சங்கத்தின் பிரதிநிதிகள் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்து நியமன முறையில் நியமித்துக் கொண்டார்கள்.

வழக்கறிஞர்களிடம் பணிபுரியும் குமாஸ்தாக்களின் நலன்களை பேணுவது, அவர்கள் யாரேனும் இறந்து போனால் அவர்களது குடும்பத்திற்கு நாலு லட்சம் ரூபாய் நிதியை தந்து உதவுவது உள்ளிட்ட விஷயங்களை நிர்வகிக்க தான் இந்த கமிட்டி அமைக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது ‘ஒவ்வொரு வக்காலத்துக்கும் பத்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்; அந்த பத்து ரூபாய் ஸ்டாம்ப் கட்டணத்தை இந்த குமாஸ்தாக்கள் நிதியில் சேர்க்க வேண்டும்’ என்ற ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதன்படித்தான் இந்த குழுவுக்கு நிதி சேர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த முறையும் இது நியமனப் பதவியாக நியமிக்கப்படும் என்று நடவடிக்கைகள் தொடங்கியபோது, பல்வேறு மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர் குமாஸ்தா சங்கங்கள் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘எங்களுக்கான நலன்களை மனதில் வைத்து செயல்படும் நபர்களை நாங்களே தேர்ந்தெடுக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்காக தேர்தல் நடத்த வேண்டும்’ என்று உரத்து குரல் எழுப்ப, வழக்கறிஞர் சங்கமும் அதனை ஏற்றுக்கொண்டு தீர்மானம் போட்டது.

அந்த தீர்மானத்தின்படி நாளை 25ஆம் தேதி இந்த தேர்தல் நடைபெறுகிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட வழக்கறிஞர் குமாஸ்தா சங்கங்களின் பிரதிநிதிகள் தீவிரமாக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஓட்டுவேட்டையாடி வருகிறார்கள். பல்வேறு மாவட்ட வழக்கறிஞர் குமாஸ்தா சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் 3500 பேர் வாக்களித்து இந்த மூன்று பேரை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியையும் சேர்த்து இறுதி நிலவரப்படி 18 குமாஸ்தாக்கள் மூன்று இடங்களுக்கு போட்டி போடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-history-election-for-lawyer-clerk-election-18-contest-for-3-seats-743335/