3 12 2023
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து இன்று (டிச.3) புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 340 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் சென்னையை நோக்கி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நாளை (டிச.4) காலை வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் புயல் வந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து டிச.5-ம் தேதி மிக்ஜாம் புயல் ஆந்திராவின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவத்துள்ளது.
இந்நிலையில் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க காவல்துறை, மாநகராட்சி, மாநில பேரிடம் மீட்புத் துறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புயல், கன மழை காரணமாக மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல்துறை, மாநகராட்சி வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
காவல் துறை எச்சரிக்கை
1. புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2. கனமழை அல்லது இடியுடன் கூடிய மழையின்போது வெளியயே செல்வதை தவிர்க்கவும். நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தால், பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனத்தைப் பயன்படுத்தவும். இடி, புயலின்போது எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
3. மின்கம்பங்கள். கம்பிகள், உலோகப் பொருள்கள் அல்லது மின்னலை ஈர்க்கக் கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்கவும், விழுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம் எனவும், அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
- வாகனங்களை ஓட்டும் போது, பிரேக்குகளை சரிபார்க்கவும்.
- தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனம் ஓட்ட வேண்டாம்.
- வாகனங்களின் வைப்பர்களைச் சரிபார்க்கவும்.
- மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
- பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
- வானிலை அறிவிப்புகள் மற்றும் அதிகாரிகளின் உடனுக்குடன் எச்சரிக்கைகளைப் பின்பற்றவும்.
- சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்படாதீர்கள்.
- அவசர நிலைகளுக்கு தொலைபேசி எண்.100-ஐ அழைக்கவும்.
- சென்னை பெருநகர காவல் துறையினர் போர்க்கால அடிப்படையில் சேவை செய்ய 24 மணி நேரமும் தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், கட்டுமான பணிகளை நிறுத்துவதுடன் அதற்கான பொருட்களை தரை தளத்தில் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்கவும்பழுதடைந்த வீடாக இருந்தால், பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும். உடைந்த மின் கம்பங்கள்/அறுந்து விழுந்த மின் கம்பிகள் அருகில் செல்லாதீர்கள் எனவும் மின்சார சாதனங்களை முழுதாக சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும். மரங்கள், மின் கம்பங்களுக்கு கீழே நிற்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/michaung-cyclone-chennai-heavy-rain-weather-update-1755746