enforcement-directorate | dvac | dindugal: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018-ல் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க ரூ.3 கோடி லஞ்சம் கொடுக்க வேண்டும் என மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி பேரம் பேசியுள்ளார்.
கைது
இந்நிலையில், திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். இதுதொடர்பாக டாக்டர் சுரேஷ் பாப ஏற்கனவே அளித்த புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தலைமையிலான காவல் துறையினர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காரிலிருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி, அவரையும் கைது செய்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தூங்க முடியாமல் தவித்த அவர், பின்னர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
தள்ளுபடி
இதற்கிடையில் மதுரை சிறையில் இருக்கும் அங்கித் திவாரிக்கு ஜாமீன் கேட்டு அவருடைய தரப்பில், திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கு ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dindigul-dist-court-on-ed-officer-ankit-tiwari-bribery-case-tamil-news-1758735