செவ்வாய், 7 மே, 2024

3ம் கட்டமாக மக்களவை தேர்தல் | குஜராத், உ.பி., உள்ளிட்ட 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது…

 7 5 24

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மூன்றாம் கட்டமாக, இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 26-ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று நிறைவடைந்தது. இதனையடுத்து, 3ம் கட்டத்தில் குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இன்று (மே 7) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

2ம் கட்ட வாக்குப்பதிவின் போது மத்தியபிரதேச மாநிலம் பெத்துல் மக்களவை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதாகவும் எனவே மொத்தம் 95 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்த குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், மோசமான வானிலை காரணமாக 3-வது கட்டத்தில் தேர்தல் நடைபெற வேண்டிய ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக்-ரஜோரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

எனவே, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் அசாம் (4), பீகார் (5), சத்தீஸ்கர் (7), டையூ-டாமன் (2), கோவா (2), குஜராத் (25), கர்நாடகா (14), மத்திய பிரதேசம் (9), மகாராஷ்டிரா (11), உத்தர பிரதேசம் (10), மேற்குவங்கம் (4) ஆகிய 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கோவா மற்றும் குஜராத்தில் மக்களவைத் தேர்தளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜெய்வீர் சிங் களம் காண்கிறார். மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தின் குணா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) கட்சியின் சார்பில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின்மனைவி சுனித்ரா பவார் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடகாவின் தார்வாட் தொகுதியில் 5-வது முறையாக போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வினோத் களத்தில் உள்ளார்.


source https://news7tamil.live/lok-sabha-election-as-the-3rd-phase-voting-has-started-in-93-constituencies-in-10-states-including-gujarat-up.html