உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இந்தியா 129வது இடத்தை பிடித்துள்ளது.
பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம், அரசியல் பங்களிப்பு ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் உலகப் பொருளாதார அமைப்பு பாலின சமத்துவத்தை மதிப்பீடு செய்து வருகிறது. 146 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 129வது இடம் கிடைத்துள்ளது. எந்த நாட்டிலும் 100% பாலின சமத்துவம் இல்லை எனவும் ஐஸ்லாந்து முன்னிலை பிடித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, நாா்வே, நியூசிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளில் பாலின ஏற்றத்தாழ்வு மிகக் குறைவாக உள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இதில் இந்தியா இரண்டு இடங்கள் சரிந்து 129வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் பாகிஸ்தான் மூன்று இடங்கள் சரிந்து 145வது இடத்திலும், கடைசி இடமான 146வது இடத்தில் சூடானும் உள்ளன. இந்த நாடுகளில் பாலின ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்த வேகத்தில், ஆண், பெண் சமத்துவ பாலின நிலையை முழுமையாக எட்ட இன்னும் 134 ஆண்டுகள் அதாவது 5 தலைமுறைகள் ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/global-gender-inequality-index-how-many-places-does-india-know.html