இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மெட்ராஸ் அதன் பிரபலமான இளங்கலை தொழில்நுட்ப (B.Tech) பட்டப்படிப்பை புதுப்பித்துள்ளது, இது ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தொழில்முனைவோரை ஆராய்வதற்கான நெகிழ்வுத்தன்மையையும் நோக்கத்தையும் வழங்குகிறது. தற்போதைய மாணவர்கள், முன்னாள் மாணவர்களிடமிருந்து விரிவான கருத்துக்களைப் பெற்ற பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பட்டப்படிப்பு, தொழில் முனைவோர் வாய்ப்புகளை முன்னெடுப்பதுடன், பல்துறை கற்றல், செயல்திட்டங்களை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கிறது.
ஐ.ஐ.டி-மெட்ராஸின் அறிக்கையின்படி, பி.டெக் படிப்பில் மொத்த வகுப்பறை பாடவேளைகளின் எண்ணிக்கை முந்தைய 436 மணிநேரத்திலிருந்து 400 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
“ஐ.ஐ.டி மெட்ராஸ் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோருக்கு அதிக முன்னுரிமை அளிக்கும். கடந்த நிதியாண்டில் 380க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஐ.ஐ.டி மெட்ராஸ் ஒரு லட்சிய ஸ்டார்ட்-அப் 100 திட்டத்தைத் தொடங்கியுள்ளது (இதில்) ஒவ்வொரு மூன்றாவது நாளிலும், ஐ.ஐ.டி மெட்ராஸில் ஒரு ஸ்டார்ட்அப் பிறக்கும்,” என இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி தெரிவித்துள்ளார்.
பி.டெக் படிப்பின் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், திட்டப்பணிகள் மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளை பெற முடியும், மேலும் துறைகளுக்கிடையேயான கற்றல் வசதிகளை அதிகரிக்க முடியும். மாணவர்கள் மொத்த பாடவேளைகளில் 40 சதவீதத்தை தேர்ந்தெடுக்கும் படிப்புகளுக்கு ஒதுக்க முடியும்.
ஐ.ஐ.டி மெட்ராஸ் 18 கல்வித் துறைகள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது, இது மாணவர்கள் பல்வேறு ஆர்வங்களைத் தொடரவும், தனித்துவமான கல்வி சுயவிவரத்தை உருவாக்கவும் அனுமதிக்கிறது.
source https://tamil.indianexpress.com/education-jobs/iit-madras-revamps-btech-degree-programme-to-offer-flexibility-reduces-total-number-of-credits-4759997