மாணவர்கள் மத்தியில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்களுக்கான ஆதரவை அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று (ஆக. 31) தனது வாட்ஸ் ஆப் சேனலில் வெளியிட்டுள்ள பதிவில்,
“நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 0-24 வயதுடையவர்களின் எண்ணிக்கை 58.2 கோடியில் இருந்து 58.1 கோடியாக குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 6,654-இல் இருந்து 13,044-ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இளைஞர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை. மாறாக, அவர்கள் சிரமங்களையும் நிர்பந்தங்களையும் எதிர்கொண்டு வருவது துரதிருஷ்டவசமானது.
இது, சமூக-பொருளாதார-உளவியல் ரீதியில் மிக மோசமான பிரச்னைகளை நோக்கி அவர்களை இட்டுச் செல்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, வினாத்தாள் கசிவுகள், கல்வித் துறையில் ஊழல், கல்விக்கான செலவு அதிகரிப்பு, சமூக ஒடுக்குமுறை, பொருளாதார சமநிலையின்மை, பெற்றோர்களின் அழுத்தம் போன்ற எண்ணற்ற பிரச்னைகளுக்கு இடையே வெற்றிக்காக மாணவர்கள் போராடுகின்றனர்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பாதையில் தடைகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக அவர்களின் சிரமங்களைக் குறைப்பதற்கான ஆதரவை நல்க வேண்டுமென மத்திய அரசிடம் எதிர்பார்க்கிறேன். மாணவர்களுக்கு மனரீதியான ஆதரவை வழங்குமாறு பெற்றோர்களுக்கு வேண்டுகோள் முன்வைக்கிறேன். நாட்டின் இளைஞர்கள், தங்களின் பிரச்னைகளுக்கு எதிராக குரலெழுப்புவதோடு, கேள்விகளை எழுப்ப வேண்டும். எதற்கும் அஞ்சாமல், உரிமைகளைக் கோர வேண்டும். நான் உங்களுக்கு துணைநிற்பேன். உங்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்ற வீதிகளில் தொடர்ந்து போராடுவேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/students-struggle-with-unemployment-question-paper-leaks-rahulgandhi.html