/indian-express-tamil/media/media_files/2026/07/17/kolathur-post-office-passport-mayor-r-priya-l-murugan-2026-07-17-08-29-06.jpg)
ஒன்றிய அரசின் பாஸ்போர்ட் மையத் திறப்பு விழாவில் மேயர் பிரியா பங்கேற்பு: தமிழக அரசியலில் பரபரப்பு
சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மைய (POPSK) திறப்பு விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆளுங்கட்சியான த.வெ.க. தலைமையிலான மாநில அரசின் அண்மைக்கால நிகழ்ச்சிகள் பலவற்றை மேயர் பிரியா தவிர்த்து வந்த நிலையில், ஒன்றிய அரசின் இந்த விழாவில் அவர் பங்கேற்றிருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
16 7 2026
வடசென்னை பகுதி மக்களின் பாஸ்போர்ட் தேவைகளை எளிதாக்கும் நோக்கில், கொளத்தூர் தபால் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பாஸ்போர்ட் சேவை மையத்தை ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, சென்னை மேயர் ஆர். பிரியா, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் இஷா ஸ்ரீவஸ்தவா, முதன்மை தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மாரியம்மா தாமஸ் மற்றும் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆர். விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசியல் சலசலப்புக்கான பின்னணி:
முதலமைச்சர் விஜய் பங்கேற்ற சென்னை மாநில அரசு நிகழ்ச்சிகள் உட்பட, அண்மையில் நடைபெற்ற பல அரசு விழாக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் மேயர் பிரியா அதில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பெரம்பூரில் நடைபெற்ற மற்றொரு அரசு விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்தச் சூழலில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், மத்திய அரசின் இந்த நிகழ்ச்சியில் அவர் மேடையில் தோன்றியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய ஒன்றிய அமைச்சர் எல். முருகன், "அரசின் சேவைகள் அடித்தட்டு மக்களுக்கு நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தோடு ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது தபால் நிலையங்கள் வெறும் கடிதப் போக்குவரத்தோடு நின்றுவிடாமல் வங்கிச் சேவைகள், காப்பீடு, அடையாள அட்டை சேவைகள் மற்றும் பல்வேறு குடிமக்கள் சார்ந்த சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஒருங்கிணைந்த பொதுச் சேவை மையங்களாக உருவெடுத்துள்ளன" என்றார்.
மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "இடைத்தரகர்கள் இல்லாத நிலையை உருவாக்க நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நிதி நேரடியாகச் செலுத்தப்படுகிறது. நிதி நல்வாழ்வை மேம்படுத்த கடந்த 12 ஆண்டுகளில் 58 கோடிக்கும் அதிகமான ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் மற்றும் பணமில்லாப் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது. மக்களின் எளிதான வாழ்க்கைக்குத் தடையாக இருந்த 1,500-க்கும் மேற்பட்ட பழமையான சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார்.
விழாவின் நிறைவாக, இந்த புதிய மையத்தின் மூலம் விநியோகிக்கப்பட்ட முதல் பாஸ்போர்ட்டை ஆறு மாதக் குழந்தையொன்றின் பெற்றோரிடம் அமைச்சர் எல். முருகன் வழங்கி வாழ்த்தினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-kolathur-post-office-passport-mayor-r-priya-l-murugan-12172114





