எங்களுக்கு பயம் இல்ல': டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த புது தலைமுறை போராளிகள்
/indian-express-tamil/media/media_files/2026/07/25/delhi-youth-protest-2026-2026-07-25-15-32-04.jpg)
டெல்லியில் 'ஜென் ஜி' புரட்சி: போன் ஸ்கிரீனை மூடிட்டு ரோட்டுக்கு வந்த புது தலைமுறை
Drishti Jain, Vidheesha Kuntamalla, Trisha Mukherjee, Devansh Mittal
டெல்லியின் ஜந்தர் மந்தரில் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே நடந்து சென்ற 21 வயதான சிவம், தன் தாயின் தோள்களை இறுக அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தார்.
கிழக்கு டெல்லியைச் சேர்ந்த இந்தத் தாயும் மகனும் கடந்த இரண்டு நாட்களாகத் தங்களது இருசக்கர வாகனத்தைச் அருகிலுள்ள சிவமின் தந்தை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு, ஜந்தர் மந்தருக்கு நடந்து வருகிறார்கள். சமீப காலத்தில் டெல்லி கண்ட மிகப்பரிய இளைஞர் போராட்டக் களம் இதுவாகும்.
நொய்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் 'எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்' பொறியியல் படிக்கும் சிவம், வேலைவாய்ப்பு குறித்த பயம் காரணமாகவே இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாகக் கூறுகிறார். "உண்மையைச் சொன்னால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. எனக்கு மூத்த மாணவர்கள் பலருக்கு வேலை கிடைக்கவில்லை. சிலர் பிளிங்கிட் (Blinkit) நிறுவனத்தில் டெலிவரி ஊழியர்களாகவும், ராபிடோ (Rapido) ஓட்டுநர்களாகவும் பணியாற்றுகிறார்கள். நான் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் செல்வேன் என்று என் பெற்றோர் நம்புகிறார்கள். ஆனால் நான் ஒரு ராபிடோ ஓட்டுநராக முடிவடைந்தால், அது அவர்களின் இதயத்தை உடைத்துவிடும்," என்கிறார் சிவம்.
கூட்டத்தில் சிவமைப் பிடித்துக் கொண்டு நிற்கும் அவரது தாய், "ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளை நன்றாகப் படித்து, நல்ல வருமானம் ஈட்டி, மரியாதையுடன் வாழ வேண்டும் என்றே கனவு காண்கிறார்கள். ஆனால், இப்போது கல்லூரிகளில் இடம் கிடைக்காமலோ, வேலை கிடைக்காமலோ குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதைப் படிக்கும்போது பயமாக இருக்கிறது. இந்தச் சிறுவர்களைப் பாருங்கள்... மின்விசிறி கூட இல்லாத கூடாரங்களிலும், கல் பலகைகளிலும் இவர்கள் தூங்குவதைப் பார்க்கும்போது என் இதயமே நொறுங்குகிறது" என்கிறார்.
தேர்வில் தொடங்கிய போராட்டம்... நாட்டின் பிரச்சினையாக மாற்றம்!
சமீபத்தில் நடந்த நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சுமார் மூன்று வாரங்களாகப் போராட்டம் நடத்தி வந்தது. ஜூலை 20 அன்று, போராட்டக்காரர்கள் டெல்லியின் மையப்பகுதியை நோக்கி முன்னேறியபோது, காவல்துறையினர் தடிஅடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் அவர்களைத் தடுத்தனர்.
அதன் பிறகு, வெறும் தேர்வு சர்ச்சையாகத் தொடங்கிய இந்தப் போராட்டம் — குறைந்து வரும் வேலைவாய்ப்புகள் முதல் உயர்த்தப்படாத வருமானம் வரை — நாட்டின் இளைஞர்களிடையே தேங்கிக் கிடந்த ஒட்டுமொத்தக் கோபத்தின் வடிகாலாக மாறியது.
ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்குப் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. ஜந்தர் மந்தரில் நடக்கும் வழக்கமான பல போராட்டங்களைப் போல இதுவும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என்றே தோன்றியது. ஆனால், அந்த இடத்திலேயே உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது நிலைமை தலைகீழாக மாறியது.
சுயநலவாதிகள், எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள் என்று விமர்சிக்கப்பட்ட இன்றைய தலைமுறை இளைஞர்கள், தங்களது கைபேசித் திரைகளிலிருந்து முகத்தை உயர்த்தினார்கள். இது இனி வெறும் ஒரு தேர்வைப் பற்றியதோ, வினாத்தாள் கசிவைப் பற்றியதோ அல்ல என்று உணரத் தொடங்கினார்கள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/25/jantar-mantar-gen-z-protest-2026-07-25-15-26-24.jpg)
'சுவராஜ் இந்தியா' அமைப்பின் உறுப்பினரும் 'பாரத் ஜோடோ அபியான்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான யோகேந்திர யாதவ் கூறும்போது:
"ஜந்தர் மந்தரில் கூடியுள்ள இந்த கூட்டம், முந்தைய தலைமுறையினர் இன்றைய இளைஞர்களைப் பற்றி வைத்திருந்த தவறான எண்ணங்களை மாற்றக் கட்டாயப்படுத்தியுள்ளது. வயதான நாம், நம்மை விட இளையவர்களுக்கு அரசியலைப் பற்றி எதுவும் தெரியாது, அவர்கள் சொகுசு வாழ்க்கைக்கே பழகிவிட்டார்கள் என்று நினைக்கிறோம். ஆனால், இளைஞர்களுக்கு அரசியல் புரியவில்லை என்பதல்ல பிரச்சினை; அவர்களின் அரசியல் மொழியை நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை என்பதுதான்."
போராட்டத்தில் ஈடுபடும் சிலர் காரசாரமான, நகைச்சுவையான சுவரொட்டிகளுடனும், சிலர் தேசியக் கொடிகளுடனும் வந்துள்ளனர். இந்தப் போராட்டத்தை வெறும் நடுத்தர மக்களின் எழுச்சியாக மட்டும் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கும் யாதவ், இதில் தலித் மற்றும் அம்பேத்கர் அமைப்புகளின் பங்களிப்பு தெளிவாகத் தெரிவதாகக் கூறுகிறார். "அவர்கள் தங்களை பட்டியலின பிரதிநிதிகளாக மட்டும் காட்டிக் கொள்ளாமல், நாட்டின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த விவாதங்களை வடிவமைக்கும் உரிமையுள்ள குடிமக்களாகப் பங்கேற்றுள்ளனர்," என்கிறார் அவர்.
'எல்லாக் கதவுகளும் அடைக்கப்படுவது போல் இருக்கிறது'
கான்பூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பொறியியல் பட்டம் பெற்ற 20 வயது ஆயுஷ், அடுத்த வாரம் குர்கானில் தனது முதல் வேலையில் சேரவுள்ளார். ஆனால் மகிழ்ச்சிக்கு பதிலாக, அவருக்குள் ஒருவித பதற்றமே நிலவுகிறது.
"என் கல்லூரியில் படித்த சுமார் 30 மூத்த மாணவர்கள் வேலைக்குச் சேர்ந்த ஒரு வருடத்திற்குள்ளேயே பணிநீக்கம் செய்யப்பட்டனர். சராசரி சம்பளம் பல வருடங்களாக ₹30,000 என்ற அளவிலேயே உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஆரம்பக்கட்ட வேலைகளைப் பறித்து வருகிறது. அரசுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிகின்றன அல்லது ஆண்டுகள் கணக்கில் தாமதமாகின்றன. எங்களது வழிகள் எல்லாமே அடைக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது" என்கிறார் ஆயுஷ்.
அதனால்தான் மே 16 அன்று, சி.ஜே.பி (CJP) நிறுவனர் அபிலாஷ் திப்கே போட்ட "எல்லா கரப்பான்களும் ஒன்றிணைந்தால் என்னவாகும்?" என்ற முதல் ட்வீட்டைப் பார்த்தவுடனேயே ஆயுஷ் அவரைப் பின்தொடரத் தொடங்கினார். ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்களில் இதுவரை நான்கு முறை கலந்து கொண்டுள்ளார்.
அதேபோல, உத்தரப்பிரதேசத்தின் மைன்புரியைச் சேர்ந்த 30 வயதான அனில் ராஜ், நீட் தேர்வர் அல்ல. ஆனாலும் நாட்டின் கல்வி முறைக்கு எதிராகப் போராட டெல்லிக்கு வந்துள்ளார். "நான் காவல் துறையில் சேர விரும்பினேன். 2024-ல் உ.பி. போலீஸ் தேர்வுக்குக் கடுமையாகப் படித்து எழுதினேன், ஆனால் வினாத்தாள் கசிந்தது. பிறகு 2025-ல் ஹோம் கார்டு தேர்வு எழுதினேன், அதுவும் ரத்து செய்யப்பட்டது. இப்போது பி.பார்ம் (B.Pharm) படிக்கிறேன். என் பெற்றோர் தங்கள் கனவுகளைத் தியாகம் செய்து என்னை படிக்க வைத்தார்கள். குரல் கொடுக்காமல் அதை வீணடிக்க முடியாது" என்று வியர்வை சிந்தக் கூறுகிறார் அனில் ராஜ்.
இளைஞர்கள் வெளிப்படுத்தும் இந்த ஆதங்கம் இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தையின் நிஜ நிலையை அப்படியே பிரதிபலிக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் (CMIE) தரவுகளின்படி, உழைக்கும் வயதில் (15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) வேலை செய்பவர்களின் விகிதம் 2016-17ல் 42.7% ஆக இருந்தது, மார்ச் 2026-ல் 38.7% ஆகக் குறைந்துள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/25/jantar-mantar-neet-protest-2026-07-25-15-27-03.jpg)
'இது இனி வெறும் தேர்வுக்கான போராட்டம் மட்டுமல்ல'
டெல்லி எத்தனையோ அரசியல் போராட்டங்களைக் கண்டிருக்கிறது. ஆனால், ஜூலை 18க்குப் பிறகு ஜந்தர் மந்தரில் கூடிய இளைஞர்கள் டெல்லிக்கு ஒரு புதிய முகத்தைக் காட்டியுள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் முதன்முறையாக ஒரு போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். சுவரொட்டிகள், கைகளி்ல் ஸ்மார்ட்போன்கள், கோஷங்கள் என களம் சூடானது. போராட்டம் முடிந்ததும், அவர்கள் தங்களது போன்களில் வீடியோக்கள் மற்றும் மீம்களை (Memes) உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பத் தொடங்கினர். அதுவே இந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக மாறியது.
34 வயதான ஆவணப்பட இயக்குநர் நுந்த்ரிஷா வக்ளு கூறும்போது, "இரவு நேரத்தில் கூட இங்கே நான் பாதுகாப்பாக உணர்கிறேன். இது இனி தேர்வுகளைப் பற்றியது மட்டுமல்ல; பல ஆண்டுகளாக எங்களது குரல் கேட்கப்படாததன் வெளிப்பாடு. புதிய தலைமுறை வாக்களிக்கத் தொடங்கியுள்ளது, கேள்விகளைக் கேட்கத் தொடங்கியுள்ளது" என்கிறார்.
லண்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூகவியல் பேராசிரியர் சஞ்சய் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "டெல்லி வரலாற்று ரீதியாகப் பிரிவினைகள் நிறைந்த நகரம். ஆனால், தற்போதைய போராட்டத்தில் அப்படிப்பட்ட எந்தக் சித்தாந்த எல்லைகளும் இல்லை. பொருளாதார எதிர்காலம் என்ற பொதுவான கவலையே அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது" என்கிறார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/25/jantar-mantar-2026-07-25-15-27-36.jpg)
'எனக்கு இப்போது பயமில்லை'
முந்தைய போராட்டங்களைப் போலன்றி, இந்த முறை பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் சேர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்ட விசித்திரமான ஒற்றுமையைக் காண முடிந்தது.
இருப்பினும், வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த 24 வயது சம்ரீன், வீட்டில் பொய் சொல்லிவிட்டுப் நூலகத்திற்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் போராட்டத்திற்கு வந்துள்ளார். "யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வை இரண்டாவது முறையாக எழுதினேன். அதுவும் வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்டது. நல்ல பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றும் என் கனவுகளை அடையும் வழி தெரியவில்லை" என்கிறார் சம்ரீன்.
அவரைப் போலவே, மகாராஷ்டிராவின் தாணேவைச் சேர்ந்த 40 வயது பிரதீக்ஷா சாவந்த், தொழில் நிமித்தமாக டெல்லி வந்தவர், கடந்த 22 நாட்களாகப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார். "எத்தனை பெண்கள் வந்திருக்கிறார்கள் பாருங்கள்! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு இப்போது பயமில்லை. ஒரு தாயாக என் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நான் இங்கு வந்திருக்கிறேன்" என்கிறார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/25/neet-paper-leak-controversy-2026-07-25-15-28-06.jpg)
'இதற்கு முன் போராட்டத்தில் பங்கேற்றதே இல்லை'
பிரயாக்ராஜைச் சேர்ந்த 16 வயது ராஜ் குமார், வீட்டிற்குத் தெரிவிக்காமல் ஓடிவந்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அஜ்மீரைச் சேர்ந்த சாஜித் (34) என்ற நபர், அந்தச் சிறுவனைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிறார்.
மற்றொரு இடத்தில் தார்பாய் கொட்டகையின் கீழ் மழையில் நனையாமல் அமர்ந்திருந்த ஹர்ஷ் சுவாமி (26), உஜ்வல் யாதவ் (20) ஆகிய இருவரும் யூ.பி.எஸ்.சி (UPSC) தேர்வுக்குத் தயாராகுபவர்கள். "நாங்கள் இருவருமே இதற்கு முன் எந்தப் போராட்டத்திலும் பங்கேற்றதில்லை. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது போல நாளை யூ.பி.எஸ்.சி-க்கும் நடந்தால் என்ன செய்வது என்ற பயமே எங்களை இங்கு வரவழைத்தது" என்கிறார்கள்.
மேடைக்குக் கீழே விரிக்கப்பட்ட பாயில் ஓய்வெடுக்கும் புஷ்பா குமாரி, அஞ்சலி சைனி, நீது சிங் ஆகிய மூன்று பெண்களும் இந்தப் போராட்டக் களத்தில் சந்தித்தவர்களே. தடிஅடியின் போது ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொண்ட இவர்கள், இப்போது ஒரு குடும்பத்தைப் போல மாறியிருக்கிறார்கள்.
கையில் குழந்தையுடன் வந்துள்ள நீது சிங் சொல்லும்போது, "போலீசார் தடியடி நடத்தியபோது புஷ்பாதான் என் மகனைப் பின்னுக்கு இழுத்துக் காப்பாற்றினார்" என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.





