25 07 2026
/indian-express-tamil/media/media_files/2026/07/25/untitled-1-2026-07-25-15-26-10.jpg)
அமெரிக்காவில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் 'கார்பஸ் கிறிஸ்டி' (Corpus Christi) எனும் கடற்கரை நகரம், நவீன அமெரிக்க வரலாற்றிலேயே தண்ணீரே இல்லாத நிலைக்குத் தள்ளப்படும் முதல் நகரமாக மாறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. பல ஆண்டுகளாகத் தொடரும் வறட்சி, அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவையே இந்த நிலைக்கு முக்கியக் காரணங்களாகும்.
தொழிற்சாலைகளின் அசுர வளர்ச்சி
கார்பஸ் கிறிஸ்டி நகரின் தீவிர நீர் பற்றாக்குறைக்கு அங்குள்ள தொழில்வளர்ச்சியும் ஒரு முக்கியக் காரணமாகும். இந்தப் பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட பெட்ரோ கெமிக்கல் ஆலைகளுக்கு நாள்தோறும் பெருமளவிலான தண்ணீர் தேவைப்படுகிறது. குறிப்பாக, 2022-ல் கட்டப்பட்ட ஒரு பிளாஸ்டிக் கெமிக்கல் ஆலை, கார்பஸ் கிறிஸ்டி நகர மக்கள் அனைவரும் தினமும் பயன்படுத்தும் தண்ணீரின் அளவுக்குச் சமமான தண்ணீரை, தனது குளிரூட்டும் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
கை கொடுக்காத 'கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்'
சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் வறட்சியால் அணை மற்றும் நீர்த்தேக்கங்கள் ஆபத்தான அளவுக்கு வற்றிப்போயுள்ளன. இந்த நெருக்கடியைச் சமாளிக்கக் கடல்நீரை நன்னீராக்கும் ஆலையைக் கட்ட அதிகாரிகள் திட்டமிட்டனர். இருப்பினும், நிதியுதவிப் பிரச்சினைகள், கடுமையான அரசாங்க விதிகள் மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் தாமதமாகியுள்ளது. பல பில்லியன் டாலர் செலவில் அமையவுள்ள இத்திட்டம் முழுமையடைய இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.
நிபுணரின் எச்சரிக்கை
"அண்மையில் பெய்த மழை சற்று ஆறுதல் அளித்திருந்தாலும், இந்த நகரத்தில் இன்னும் ஒரு வருடத்திற்கு மட்டுமே போதுமான நீர் இருப்பு உள்ளது. இது ஒரு அவசரநிலையாகவே கருதப்படுகிறது" என்று 'இன்சைடு க்ளைமேட் நியூஸ்' பத்திரிகையாளர் டைலன் பேடோர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
நீர் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த, மக்கள் தங்களது தோட்டங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவது மற்றும் கார்களைக் கழுவுவது போன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிலைமை மேலும் மோசமடைந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்வது போன்ற அவசர கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/international/this-america-city-could-run-out-of-water-a-warning-for-the-world-12196756





