17 7 2026
/indian-express-tamil/media/media_files/2026/07/17/pollute-2026-07-17-19-31-24.jpg)
உலகிலேயே மிகவும் காற்று மாசுபாடு அடைந்த நகரங்களின் பட்டியலில் பொதுவாகத் தெற்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் நகரங்களே முன்னணியில் இருக்கும். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கனடாவில் பற்றி எரியும் கடுமையான காட்டுத்தீயின் அடர் புகை ஒட்டுமொத்த வட அமெரிக்காவையும் சூழ்ந்துள்ளதால், அமெரிக்கா மற்றும் கனடாவின் முக்கிய நகரங்கள் உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட இடங்களின் பட்டியலில் முதலிடங்களைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) 350-ஐக் கடந்து ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.
உலகையே அதிர வைத்த தற்போதைய தரவரிசை
இந்திய நேரப்படி ஜூலை 17 மதியம் 1:46 மணி நிலவரப்படி வெளியான தரவுகளின் படி உலகின் டாப் 50 மிக மோசமான காற்று மாசுபாடு உள்ள இடங்கள் அனைத்தும் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே அமைந்துள்ளன. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வாட்டர்லூ (Waterloo), லண்டன் மற்றும் பிரான்ட்ஃபோர்ட் (Brantford) ஆகிய நகரங்கள் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் சிட்டி, சிகாகோ மற்றும் வாஷிங்டன் போன்ற முக்கிய நகரங்களும் இதில் அடங்கும்.
திடீரென அமெரிக்கா மற்றும் கனடாவில் இவ்வளவு மாசுபாடு ஏன்?
இந்த காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலைகளோ அல்லது வாகனப் புகையோ காரணம் அல்ல; கனடாவில் பற்றி எரியும் 850-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ தான் காரணம். காடுகள் எரியும்போது வெளிப்படும் ஆபத்தான பி.எம்.2.5 எனப்படும் நுண்ணிய நச்சுத் துகள்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்குப் பரவி, மக்களின் நுரையீரல் மற்றும் இரத்த ஓட்டத்தில் கலக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய கடுமையான வெப்ப அலையும், காற்றில் நிலவும் அதிக அழுத்தமும் இந்தப் புகையை வான்வெளியில் கலைந்து போகவிடாமல் தரைக்கு அருகிலேயே தேக்கி வைத்துள்ளது. இதனால் அமெரிக்காவின் மின்னிசோட்டா முதல் நியூயார்க் வரையிலான 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு அவசரக் காற்றுத் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெட்ராய்ட் நகரத்தில் சில கண்காணிப்பு அமைப்புகளில் காற்றின் தரத்தின் அளவு 700-ஐத் தொட்டது. மிச்சிகன் பகுதியில் இது வரலாறு காணாத வகையில் 1,000-ஐக் கடந்து ஒட்டுமொத்த உலகையும் மிரட்டியுள்ளது.
கனடாவை உலுக்கும் காட்டுத்தீ
கனடாவில் தற்போது 850-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ பரவி வரும் நிலையில், அதில் 100-க்கும் மேற்பட்ட தீயை இன்னும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. இதன் காரணமாக மனிடோபா, சஸ்காட்செவன் மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த அவல நிலை எப்போது மாறும்?
மழை பெய்தாலோ அல்லது பலத்த காற்று வீசி திசை மாறினாலோ மட்டுமே இந்த அடர் புகை மூட்டம் கலைந்து காற்று சுத்தமாகும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
source https://tamil.indianexpress.com/international/worlds-most-50-polluted-cities-all-in-two-countries-where-is-india-12174307





