வியாழன், 23 ஜூலை, 2026

3 ஆண்டுகளில் 1500 மிரட்டல்கள்; அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர் சென்னையில் கைது

 

Bomb threat

கடந்த 2023 முதல் 2025 வரை சுமார் மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு அனுப்பப்பட்ட ஒவ்வொரு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலும் பாதுகாப்பு அமைப்புகளை கடும் பதற்றத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு முறை மின்னஞ்சல் வந்தபோதும் விமானங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன, வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் விரைந்து சோதனை நடத்தப்பட்ட பிறகு, அனைத்து மிரட்டல்களும் போலியானவை என்பதும தெரியவந்தது.

இந்த மிரட்டல்கள் குறித்து தமிழ்நாடு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு (ATS) போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாகக் கூறப்படும் அமெரிக்காவில் வசித்து வந்த மென்பொருள் பொறியாளர் சரத் சுப்பிரமணியன் சங்கர் என்பவரை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவில் காவல் கண்காணிப்பாளர் ஐ. ஷனாஸ் பணியாற்றியபோது அவரது தலைமையில் இந்த வழக்கின் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. விசாரணையின் போது, சந்தேகநபர் தவறுதலாக தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் இருந்து மிரட்டல் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பியிருந்தார். அந்த டிஜிட்டல் ஆதாரத்தை பயன்படுத்தி, அவர் பயன்படுத்திய அடையாள மறைவு தொழில்நுட்பங்களையும் மீறி விசாரணை அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் எதிஹாட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தபோது, குடியுரிமை அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புருஷோத்தமன் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் ரெபோனி தலைமையிலான தமிழ்நாடு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

சரத் மீது தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வர்த்தக விமானங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அண்ணா பல்கலைகழகம், அரசியல்வாதிகள், மூத்த காவல் அதிகாரிகள், ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களுக்கு அவர் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது அடையாளத்தை மறைப்பதற்காக குறியாக்கம் செய்யப்பட்ட தகவல் தொடர்பு சேவைகள், மெய்நிகர் தனியார் வலைப்பின்னல்கள் (VPN), டார்க் வெப் கட்டமைப்புகள் மற்றும் வெளிநாட்டு சர்வர்களை பயன்படுத்தி மின்னஞ்சல்களை அனுப்பியதாகவும், இதனால் விசாரணை மிகவும் சிக்கலானதாக இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழ்நாடு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு நேரடியாக 33 வழக்குகளை பதிவு செய்துள்ளது. 

மேலும், மாநிலம் முழுவதும் நகர காவல்துறை, சைபர் குற்றப்பிரிவு மற்றும் பிற விசாரணை அமைப்புகள் மூலம் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பிறகு சரத் சுப்பிரமணியன் சங்கர், சென்னை கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilandu-police-arrest-us-based-software-engineer-for-bomb-threat-mail-sent-issue-12189530