/indian-express-tamil/media/media_files/2026/07/28/nellai-manonmaiyam-2026-07-28-11-43-38.jpg)
வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா: ஆளுநரை எதிர்த்து விழாவை புறக்கணித்த அமைச்சர்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், விழா நடைமுறைகளில் ஏற்பட்ட அடுத்தடுத்த சர்ச்சைகள் மற்றும் குளறுபடிகளால் பட்டமளிப்பு விழாவில் பெரும் பரபரப்பும் ஆவேசச் சூழலும் நிலவியது. பட்டமளிப்பு விழாவில் மத்திய அரசின் உத்தரவுப்படி வந்தே மாதரம் முதலில் பாடப்படும், இரண்டாவதாக தேசிய கீதம், 3-வதாக மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை வழங்காமல், தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்வதாக இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், அரசியல் கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருவதால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படுவதற்கும், அதை அவமதிப்பதற்கும் கடும் கண்டனம் தெரிவித்து, பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்தார். மதுரையில்உள்ள அமைச்சர் விஸ்வநாதன் தற்போது வரை நெல்லைக்கு புறப்படவில்லை. அமைச்சரைப் போலவே, தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும் ஆளுநரை எதிர்த்தும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாகக் கடையநல்லூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் மற்றும் நெல்லை த.வெ.க எம்.எல்.ஏ முருகன் ஆகியோர் அறிவித்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகளின் இந்த முடிவை வரவேற்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தனது 'X' பக்கத்தில், ஆளுநர் தனது நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முனைவர் பட்டம் பெறும் அனைவருக்கும் ஆளுநர் தனது கையால் பட்டம் வழங்குவதே மரபாக இருந்து வந்த நிலையில், விழாவில் 871 பேரில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஆளுநரிடம் நேரடியாக பட்டம் பெறலாம் என்ற நம்பிக்கையில் வந்த மாணவர்கள் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர். பாதுகாப்பு காரணங்களாலும், கடந்த முறை மாணவி ஒருவர் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்ததை மனதில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
மரபை மாற்றக் கூடாது என்றும், முனைவர் பட்டம் பெறும் அனைவருக்கும் ஆளுநர் கையால் பட்டம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த குளறுபடிகளால் ஆவேசமடைந்த மாணவர்களின் கடும் எதிர்ப்பால் விழா அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் போராட்டத்தையும் தொடர்ந்து, முனைவர் பட்டம் பெறும் அனைவருக்கும் ஆளுநர் தனது கையால் பட்டம் வழங்குவார் என்று ஆளுநரின் செயலாளர் சஜன்சிங் சவான் உடனடியாக அறிவித்தார்.
இதனிடையே, பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக வந்தே மாதரத்துடன் தொடங்கியது. தமிழ்நாட்டில் நடக்கும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவொன்று முதன்முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்குவது இதுவே முதல்முறையாகும். மேலும், இன்று முனைவர் பட்டம் பெற வேண்டியிருந்த டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என்ற தகவலும் வெளியானது. காவல்துறை ஆலோசனைக்கூட்டம் மற்றும் அலுவலக பணி காரணமாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றும் ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை என்றும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/major-controversy-at-msu-convocation-minister-boycotts-event-over-tamil-thai-vaazhthu-issue-tn-higher-education-minister-mlas-boycott-msu-convocation-amid-song-12204198





