திங்கள், 20 ஜூலை, 2026

மேகதாதுவிற்கு நடுவர் மன்றம் கோருவதை நாடாளுமன்றத்தில் கைவிட வேண்டும்

 PR Pandian 4

காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி மேகதாதுவிற்கு நடுவர் மன்றம் கோருவதை நாடாளுமன்றத்தில் தி.மு.க கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் நடுவர் மன்றம் கோருவதை நாடாளுமன்ற ஒத்திவைப்புத் தீர்மான விவாதத்தின்போது தி.மு.க கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நடுவர் மன்றம் கோருவது உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய இறுதித் தீர்ப்பிற்கு முரணானது என்று சுட்டிக்காட்டிய அவர், டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு குறுவை சாகுபடிப் பரப்பு கடுமையாகக் குறைந்துள்ளதால் வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 15,000 வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை திருச்சி வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:

pr pandiyan press meet
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாநில துணைத் தலைவர் திருச்சி பாரூக், மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண், செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன், முசிறி யோகநாதன், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தெய்வமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும். 
இது குறித்து இந்திய நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் மாநிலங்களவையில் திருச்சி சிவாவும்,  கொண்டு வந்திருக்கின்ற மேகதாது குறித்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை  வரவேற்கிறோம்.

அதே சமயம், தி.மு.க ஆட்சியில் மேகதாது அணை குறித்து மீண்டும் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி மேகதாது அணை கட்டக்கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் த.வெ.க அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நிர்மூலமாக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடைசெருகளாக இணைத்தது சட்ட விரோதமானது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிற்கு முரணானது. அதனைத் தமிழக சட்டமன்றம் ஏற்றுக் கொண்டதையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தற்போது நாடாளுமன்ற ஒத்திவைப்பு தீர்மாண விவாதத்தின்போது மீண்டும் நடுவர் மன்றம் கோருவதை கைவிட வேண்டுமென காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் வலியுறுத்துகிறேன். அப்படி வலியுறுத்தினால் கீழ்பாசன விவசாயிகளான தமிழக விவசாயிகள் அனுமதியின்றி நீர்தேக்கமோ, புதிய அணைகளோ கட்டக் கூடாது என்ற காவிரி நடுவர் மன்ற இரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து மத்திய அரசிதழில் வெளியிட்டதற்கு எதிராக அமைந்துவிடும்.

காவிரி டெல்டாவில் சென்ற 2025ம் ஆண்டு 6.31 லட்சம் ஏக்கர் சாகுபடி மேற்கொண்டோம். நடப்பாண்டு 2 லட்சம் ஏக்கராக குறுவை குறைந்து விட்டது. தற்போது சம்பா  சாகுபடியும் கேள்விக் குறியாகி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து ஆய்வு செய்யத் தமிழக அரசு ஓர் உயர்மட்டக் குழுவை அனுப்பி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட வேண்டும். ஏற்கனவே முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியதை பின்பற்றி ஏக்கர் 1க்கு ரூ 15000 ம் நிவாரணம் அறிவிக்க வேண்டும். 

நடப்பாண்டில் மேட்டூர் அணை திறக்க வாய்ப்புள்ளதா? சம்பா நெல் பயிர் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதா? வேண்டாமா? நேரடி விதைப்பு செய்வதா? என்பதற்கான வழிகாட்டுதலை தமிழக அரசு வழங்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் பற்றாக்குறை காலத்தில் கர்நாடகம் தமிழகம் தண்ணீர் பங்கீட்டுக் கொள்வதற்கான வழிமுறையை பின்பற்றி வரும் 22ம் தேதி நடைபெற உள்ள 53வது காவிரி  மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பெற்றுதர தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

காவிரி நீரை விடுவிக்க கர்நாடகம் மறுத்தால், தமிழகத்திற்கு இழப்பீட்டுத் தொகையைக் கர்நாடக அரசிடமிருந்து பெற்றுத்தர தமிழக அரசு காவிரி ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்து பெற வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாநில துணைத் தலைவர் திருச்சி பாரூக், மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண், செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன், முசிறி யோகநாதன், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தெய்வமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி



source https://tamil.indianexpress.com/tamilnadu/pr-pandian-urges-dmk-to-drop-tribunal-demand-on-mekedatu-issue-in-parliament-trichy-press-meet-12179779