தீவிரமடைந்த நீட் வினாத் தாள் கசிவு போராட்டம்: 47 அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய என்.டி.ஏ
மேலும், தவறிழைத்த அதிகாரிகளுக்குப் தகுந்த பாடம் புகட்டவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையிலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பக்கட்ட நடவடிக்கை மட்டுமே என்றும், தேர்வு முறையைச் சீரமைக்க மேலும் பல கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் என்.டி.ஏ வட்டாரம் கூறி உள்ளது. இதனிடையே, அரசுப் பொதுத் தேர்வு வினாத்தாள்களைக் கசியவிடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை கடுமையாக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டின் 'பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிகள் தடுப்பு) சட்டத்தில்' (Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024) திருத்தங்கள் மேற்கொள்ள இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கால் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வியாழக்கிழமை நள்ளிரவில் X பக்கத்தில் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, முறைகேடுகளைத் தடுக்கக் கடுமையான புதிய சட்டம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
பிரதமர் தனது உரையில், தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி, நள்ளிரவில் இதற்கான வரைவு முன்மொழிவை துறைகள் என்னிடம் சமர்ப்பித்து உள்ளன. விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளைக் கொண்ட இந்த வரைவு, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அமைச்சரவை சகாகாளின் ஆலோசனைகளை உள்வாங்கி வரைவு இறுதி செய்யப்படும். வரும் திங்கட்கிழமை தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் 2-வது வாரத்திலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.





