வியாழன், 16 ஜூலை, 2026

வரலாற்றைத் திரிப்பதா? 'ஆதிதிராவிடர்' அடையாளத்தை நீக்க வேண்டிய அவசியம் என்ன?

 

வரலாற்றைத் திரிப்பதா? 'ஆதிதிராவிடர்' அடையாளத்தை நீக்க வேண்டிய அவசியம் என்ன?  15 7  2026

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையைச் 'சமூகநீதித் துறை' எனப் பெயர் மாற்றம் செய்த நடவடிக்கை பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக, தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, “ஆதிதிராவிடர் சொல் - விவாதம் தேவை” என்ற தலைப்பில் காரசாரமான தலையங்கத்தை வெளியிட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் ஒடுக்கப்பட்ட மக்களின் சாதி கடந்த அடையாளத்தை மறைக்கும் செயல் என்றும், இதே நடவடிக்கை தி.மு.க ஆட்சியில் நடந்திருந்தால் நாடே ரணகளமாகியிருக்கும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக “ஆதி­தி­ரா­வி­டர் சொல் - விவா­தம் தேவை” என்ற தலைப்பில் முரசொலி தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது: “ஆதி­தி­ரா­வி­டர் என்ற சொல்லை சத்­தமே இல்­லா­மல் நீக்கி இருக்­கி­றது விஜய் அரசு. இதே செயல் தி.மு.க. ஆட்­சி­யில் நடந்­தி­ருந்­தால் நாடே ரண­க­ளம் ஆகி இருக்­கும். விஜய் ஆட்­சி­யில் விஜய்­யைப் போலவே நிரந்­தர மவுன விர­தம்

இருக்­கி­றார்­கள் அவ­ரது கூட்­ட­ணி­யி­னர். பட்­டி­ய­லின சமூ­கத்­தைச் சேர்ந்த எட்­டுப் பேர் அமைச்­சர்­கள் ஆனது சாதனை அல்­லவா? என்று தனது தோளில் தானே தட்­டிக் கொள்­கி­றார் முத­ல­மைச்­சர் விஜய். இந்த எட்­டுப் பேரும் பட்­டி­ய­லின சமு­தா­யத்­துக்­காக என்ன செய்­தி­ருக்­கி­றார்­கள்? என்­ப­தை­யும் அவர் சேர்த்­துச் சொல்லி இருக்க வேண்­டும்.

60 நாட்­க­ளுக்­குள் 8 ஆண­வக் கொலை­கள் நடந்­துள்­ள­தை­யும் சாத­னைப் பட்­டி­ய­லில் சேர்த்­துக் கொள்­ள­லாமா?

காலம் கால­மாக இருந்த ‘ஆதி­தி­ரா­வி­டர்’ அடை­யா­ளச் சொல்லை திட்­ட­மிட்டு நீக்­க­வேண்­டிய அவ­சி­யம் என்ன வந்­தது? நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்

ரவிக்­கு­மார், எழுத்­தா­ளர் ஆத­வன் தீட்­சண்யா, ஆய்­வா­ளர் கெள­தம சன்னா போன்­ற­வர்­கள் மட்­டுமே இதற்­கான எதிர்ப்பை பதிவு செய்­துள்­ளார்­கள்.

அமைச்­ச­ர­வை­யில் ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத்­து­றை­யின் அமைச்­ச­ராக விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யைச் சேர்ந்த வன்­னி­அ­ரசு அவர்­கள் அமைச்­ச­ராக இருக்­கும் போது இது நடந்­துள்­ளது. இதனை அவர் நியா­யப்­ப­டுத்­திப் பேசி­யும் இருக்­கி­றார்.

ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் துறை என்ற அமைச்­ச­கத்­தின் பெயர் சமூ­க­நீ­தித்­துறை என மாற்­றப்­பட்டு இருக்­கி­றது. ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­ யி­னர் நலத்­துறை என்­ப­தன் நோக்­கம் வேறு. அதனை சமூக நீதி என்ற சொல்­லுக்­குள் மட்­டும் அடக்கி விட­மு­டி­யாது. சமூக நீதித் துறை என்று சொல்­லி­விட்­டால் அத­னுள் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் வரு­வார்­கள். மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் வரு­வார்­கள். இதை எல்­லாம் விட்டு விட்டு ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் துறைக்கு மட்­டும் சமூ­க­நீ­தித் துறை என்று பெயர் சூட்டி ஆதி திரா­வி­டர் சொல்லை நீக்க வேண்­டிய அவ­சி­யம் என்ன?

1922 மார்ச் 20 அன்று ஆதி திரா­வி­டர் என்ற பெயர் மாற்­றத்­துக்­கான உத்­த­ரவு நீதிக்­கட்சி ஆட்­சி­யால் பிறப்­பிக்­கப்பட்­டது. அது­வரை தொழி­லா­ளர் நலத்­து­றைக்­குள் தான் ஆதி­தி­ரா­வி­டர் நல­னும் அடங்கி இருந்­தது. நீதிக்­கட்சி ஆட்­சி­யில்­தான் தொழி­லா­ளர் நலத்­து­றை­யில் இருந்து இது பிரிக்­கப்­பட்­டது.

1969 ஆம் ஆண்டு முதல்­மு­த­லில் முதல்­வர் ஆன கலை­ஞர் அவர்­கள் தான் ஆதி­தி­ரா­வி­டர் நலத்­து­றை­யை­யும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத் துறை­யை­யும் தனித்­து­றை­யாக உரு­வாக்­கி­னார்­கள். பிற்­ப­டுத்­தப் பட்­டோர் நல­னுக்­கான சட்­ட­நா­தன் ஆணை­யத்தை அமைத்­தார்­கள். அந்­தப் பரிந்­து­ரைப்­படி இட­ஒ­துக்­கீடு முறையை அமல்­ப­டுத்­தி­னார் முத­ல­மைச்­சர் கலை­ஞர். இந்த வர­லாறு ஏதும் தெரி­யா­மல், அல்­லது இந்த வர­லாற்றை மறைக்­கும் வகை­யில், திரிக்­கும் வகை­யில் ஆதி­தி­ரா­வி­டர் என்ற சொல் நீக்­கப்­பட்­டுள்­ளது.

“1922 ஆம் ஆண்டு சென்னை மாகா­ணத்தை ஆண்டு கொண்டிருந்த நீதிக் கட்சி ஆட்­சி­யின்­போது ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளின் அன்­றைய தலை­வர் களா­யி­ருந்த பெருந்­த­லை­வர் எம்.சி.ராஜா, மாவீ­ரன் இரட்­டை­மலை சீனி­வா­சன் ஆகி­யோர் போரா­டிப் பெற்ற ‘சாதி கடந்த அடை­யா­ளம்’ அது. அதற்­கு­முன் ஆதி திரா­வி­டர் என்ற பெய­ரில் எந்தவொரு சாதி­யும் தமிழ்நாட்டில் இருந்­த­தில்லை.

20-ம் நூற்­றாண்­டின் முற்­ப­கு­தி­யில் ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளும் பிற்படுத்தப்பட்ட மக்­க­ளும் இந்­தி­யா­வின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் தம்மை அமைப்­பா­கத் திரட்­டிக்­கொண்டு செயல்­பட்­டுள்­ள­னர். அவ்­வாறு உரு­வான அமைப்­பு­க­ளில் புராண அடை­யா­ளமோ, மத அடை­யா­ளமோ அற்ற ஒரு ‘சம­யச் சார்­பற்ற’ (secular ) வகையின­ மாக முன்­வைக்­கப்­பட்­டது ஆதி திரா­வி­டர் என்­பதே ஆகும். அதை முன்­வைத்த தலை­வர்­க­ளின் அர­சி­யல் முதிர்ச்­சி­யும், தொலை­நோக்­குப் பார்­வை­யும் போற்­று­த­லுக்­கு­ரி­யவை. அது இந்­தி­யா­வில் உள்ள ஒட்­டு­மொத்த எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மக்­க­ளுக்­கு­மான முன்­னு­தா­ர­ணம் ஆகும்.

ஆதி திரா­வி­டர் என்ற சாதி கடந்த சம­யச் சார்­பற்ற அடையாளத்தை கொச்­சை­யா­கப் புரிந்து கொள்­ப­வர்­கள்­தாம் அதை மாற்ற வேண்­டும் எனக் கோரு­கி­றார்­கள். அந்­தக் கோரிக்கையை இந்த அரசு ஏற்­றுக்­கொண்­டி­ருப்­பது வேதனை அளிக்­கி­றது” என்று ரவிக்­கு­மார் எம்.பி. எழுதி இருக்­கி­றார்.

திரா­வி­டம் என்­பது மொழிக் ­கு­டும்­பத்­துச் சொல்­லாக மட்­டுமே இருந்­து­வந்த நிலை­யில் அதனை அர­சி­யல் சொல்­லாக சமூ­கப் பயன்­பாட்­டுச் சொல்­லாக மாற்­றி­யது தலித் இயக்­கங்­களே!

இந்­தக் கருத்­தாக்­கத்­தின் முதற்­கட்ட மூன்று தத்துவாசிரியர்களாகவும் செயற்­பாட்­டா­ளர்­க­ளா­க­வும் பண்­டி­தர் அயோத்தி தாசர் (1845--–1914), இரட்­ட­மலை சீனி­வா­சன் (1859-–1945), எம்.சி.இராஜா (1883-–1947) ஆகிய மூவ­ரை­யும் சொல்­ல­லாம்.

1892-ல் உரு­வான ஆதி­தி­ரா­விட ஜன­சபை என்ற அமைப்பு உருவானது. இதே காலக்­கட்­டத்­தில் ஜான்­ரத்­தி­னம் முயற்­சி­யால் ‘திரா­வி­டர் கழ­கம்’ என்ற அமைப்­பும் உரு­வா­னது. 1916-ல் உருவான ஆதி­தி­ரா­விட மகா­ஜ­ன­சபை, 1928-ல் உரு­வான அகில இந்­திய ஆதி­தி­ரா­விட மகா­ஜ­ன­சபை ஆகிய மூன்­றும் மிக முக்­கி­ய­மான அமைப்­பு­கள்.

மிண்டோ மார்லி சீர்­தி­ருத்­தக் குழு­வுக்கு கொடுத்த வகுப்­பு­ரிமை விண்­ணப்­பத்­தில் சாதி இந்­துக்­கள் என்­பதை ஒரு பிரி­வா­க­வும் சாதி­யற்ற திரா­வி­டர்­கள் தாழ்த்­தப்­பட்ட வகுப்­பி­னர் என்­பதை மற்­றொரு பிரி­வா­க­வும் பகுத்­துக் காட்­டி­னார் அயோத்­தி­தா­சர். (1909)

பார்ப்­ப­ன­ரல்­லா­தார் அர­சி­யல் வெகு­வா­கப் பேசப்­ப­டத் தொடங்கிய பிறகு ஆதி­தி­ரா­வி­டர் என்ற சொல்­லுக்கு அழுத்­தம் கொடுத்தார் எம்.சி.இராஜா. ‘‘தமிழ் மாவட்­டங்­க­ளில் ஆதி திராவிடர் என்­றும் தெலுங்கு மாவட்­டங்­க­ளில் ஆதி ஆந்­தி­ரர் என்­றும் இனிமேல் அழைக்க வேண்­டும்” என்று சட்­ட­மன்­றத்­தில் தீர்மானம் கொண்டு வந்­தார் எம்.சி.இராஜா (1922) நீதிக்­கட்­சி­யின் ஆட்சியில்தான் ஆதி திரா­வி­டர் என்று அழைக்­கும் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டது.

1890களின் இறு­தி­யில் 1900 ஆண்­டு­க­ளில் தொடக்­கத்­தி­லேயே ‘திரா­வி­டன்’ என்­பது அர­சி­யல் சொல்­லாக, சமூ­கச் சொல்­லாக, இனச் சொல்­லாக அர­சி­யல், பண்­பாட்­டுத் தளத்­தில் விதைக்கப்பட்டு விட்­டது. அந்­தச் சொல்­தான் இப்­போது நீக்கப்பட்டுள்ளது. 

ஆதி­தி­ரா­வி­டர் என்ற சொல்லை நீக்­கி­யதை ஆத­ரித்­தும் சிலர் பதி­விட்டு வரு­கி­றார்­கள். எனவே இதில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நீண்ட விவா­தம் நடத்­தியே முடி­வெ­டுக்க வேண்­டும். அரசு அவ­ச­ரப்­ப­டக்­கூ­டாது.” என்று முரசொலி குறிப்பிட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/murasoli-editorial-slams-cm-vijay-tvk-govt-for-removing-adi-dravidar-name-from-department-12168163