/indian-express-tamil/media/media_files/2026/07/15/koodankulam-2026-07-15-22-37-00.jpg)
தமிழ்நாட்டில் உள்ள குடங்குளம் அணுமின் நிலையத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கோப்புகள் டார்க் வெப்பில் (dark web) கசிந்துள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, 3-ம் தரப்பு தரவு மைய வழங்குநரால் பராமரிக்கப்படும் ஒரு சர்வரில் "பகுதி தரவுக் கசிவு" ஏற்பட்டுள்ளதை ரிலையன்ஸ் குழுமம் உறுதிப்படுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் திட்டம் தொடர்பான பொறியியல் ஆவணங்கள், சப்ளையர்களின் விவரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பதிவுகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கோப்புகளைத் தாங்கள் வெளியிட்டிருப்பதாக 'வேர்ல்ட் லீக்ஸ்' (World Leaks) என்ற ரான்சம்வேர் குழு உரிமை கோரியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தரவு மைய சேவை வழங்குநரான 'யோட்டா' (Yotta) நிறுவனத்தின் சர்வரில் சேமிக்கப்பட்டிருந்த தங்களது தரவுகளில் "கசிவு" ஏற்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து அரசுக்குத் தெரிவித்துள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த அறிக்கையில் ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கசிந்த தரவுகளின் தன்மை என்ன என்பதை நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.
தரவுக் கசிவை உறுதி செய்த ரிலையன்ஸ், அரசுக்கு கொடுத்த தகவல்
இந்தத் தரவுக் கசிவு 3-ம் தரப்பு சர்வரில் உள்ள தரவுகளுடன் மட்டுமே சேமிக்கபபட்டது என்றும், இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ரிலையன்ஸ் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. கசிந்துள்ள தரவுகளில் குடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை நிறுவனம் குறிப்பிடவில்லை. இதனிடையே 'வேர்ல்ட் லீக்ஸ்' பதிவேற்றிய ஆவணங்களை தாங்கள் ஆய்வு செய்ததாகவும், ஆனால் அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
கட்டுமானத்தில் உள்ள மின் நிலைய உள்கட்டமைப்பு
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்றாக இருக்கும் குடங்குளம் அணுமின் நிலையம், நாட்டின் அணுசக்தித் திறனை விரிவாக்கும் திட்டங்களில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்திட்டத்தின் 3 மற்றும் 4 ஆகிய யூனிட்டுகளுக்கான உள்கட்டமைப்பை வடிவமைத்து உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை 2018 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனம் பெற்றது. தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த இரண்டு யூனிட்டுகளும் 2027 ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை இரண்டும் இணைந்து 2,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை வழங்கும்.
இதனிடையே, ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, இணையத்தில் பதிவிடப்பட்ட கோப்புகளில் இந்தத் திட்டம் தொடர்பான பொறியியல் வரைபடங்கள், ஆய்வுப் பதிவுகள், விற்பனையாளர் (vendor) தகவல்கள், கூட்ட ஆவணங்கள் மற்றும் காப்பீடு தொடர்பான பதிவுகள் ஆகியவை அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்த 'யோட்டா'
தகவல் கசிவை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சர்வரைப் பராமரிக்கும் 'யோட்டா' நிறுவனம், மே 29 அன்று ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சருக்குச் சொந்தமான சர்வரில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளது. அந்தச் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டு, ரான்சம்வேர் தாக்குதல் நடத்தப்படுவது தடுக்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது.
அதே சமயம், இந்த தரவுக் கசிவுக்கு வெளிப்புற அச்சுறுத்தல் குழுக்கள் பொறுப்பேற்றுள்ளதாக ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர் தங்களுக்குத் தெரிவித்ததாக யோட்டா கூறியுள்ளது என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஹேக்கர்களின் கூற்றுகளைத் தாங்கள் சுயாதீனமாகச் சரிபார்க்கவில்லை என்றும், ஆனால் தங்களது தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை ரிலையன்ஸ் உடன் பகிர்ந்து கொண்டு, நடந்து வரும் விசாரணைக்கு ஆதரவளித்து வருவதாகவும் அந்தத் தரவு மைய ஆபரேட்டர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை ஆராயும் அதிகாரிகள்
இச்சம்பவம் குறித்து இந்தியாவின் கணினி அவசரக்கால பதிலளிப்புக் குழு (CERT-In) விசாரித்து வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. நாட்டின் அணுமின் நிலையங்களை இயக்கும் இந்திய அணுசக்தி கழகம் (NPCIL), இந்தத் தரவுக் கசிவு குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய அணுசக்தி கழகம் (NPCIL), இந்தியாவின் கணினி அவசரக்கால பதிலளிப்புக் குழு (CERT-In) மற்றும் அணுசக்தித் துறையின் அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இணையப் பாதுகாப்பு குறித்த கவலைகள்
முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட இணையப் பாதுகாப்பு அபாயங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை உள்கட்டமைப்பு, விற்பனையாளர்கள் அல்லது திட்ட வரைபடங்கள் தொடர்பான ஆவணங்கள் உண்மையானவை என்று உறுதிப்படுத்தப்பட்டால், அவை தீங்கிழைக்கும் சக்திகளால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக 2019 ஆம் ஆண்டில் கூடங்குளம் மின் நிலையத்தின் நிர்வாக நெட்வொர்க்கில் வட கொரிய ஹேக்கிங் குழுவுடன் தொடர்புடைய தீம்பொருள் (malware) கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது, மின் நிலையத்தின் செயல்பாட்டு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை என்று இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/ransomware-group-claims-kudankulam-nuclear-plant-files-leak-reliance-confirms-partial-breach-report-12167899





