/indian-express-tamil/media/media_files/2026/07/28/karnataka-mekedatu-project-issue-cauvery-water-dispute-supreme-court-cauvery-verdict-2026-07-28-08-13-19.jpg)
மேகதாது விவகாரம்: காவிரி குறுக்கே புதிய கட்டுமானம் கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையா? – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
காவிரி நதியின் குறுக்கே புதிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்குத் தமிழ்நாடு உள்ளிட்ட கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ், மேகதாது திட்டத்தைச் செயல்படுத்தும் முன் கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற வேண்டியது அவசியமா என்பது குறித்துக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி, 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பைக் சுட்டிக்காட்டினார்.
'2007-ஆம் ஆண்டு காவிரி நீர் தீர்ப்பாயம் (CWDT) வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு சரியானதே என உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. நடுவர் மன்ற உத்தரவுக்கு முரண்படாத வகையில், ஒரு மாநிலம் தன் எல்லைக்குள் இருக்கும் நீரைப் பயன்படுத்துவதையோ அல்லது சீரமைப்பதையோ இந்த உத்தரவு தடுக்காது என்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது" ராஜ் பூஷண் சவுத்ரி தெரிவித்தார்.
மேகதாது திட்ட அறிக்கையின் தற்போதைய நிலை
மேகதாது குடிநீர் மற்றும் சமநிலை நீர்த்தேக்கத் திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர், கர்நாடக அரசு 2019-இல் சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை (DPR) குறித்துக் குறிப்பிட்டார்:
கர்நாடக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் (CWC) வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இல்லை. இதனால், நடுவர் மன்றத் தீர்ப்புக்கு அமைவாகத் திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரி, பழைய DPR கர்நாடக திட்ட அதிகாரிகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கான காவிரி நீர்ப் பங்கீடு கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், தமிழக அரசு இத்திட்டத்திற்குத் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த விளக்கத்திற்குத் தமிழகத்தைச் சேர்ந்த வல்லுநர்களும் அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர். சுப்பிரமணியன் தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிய மத்திய அரசின் விளக்கம் தவறானது மற்றும் அரைகுறையானது. உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை மத்திய அரசு தவிர்த்துவிட்டது. இத்தகைய நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பலவீனப்படுத்துவதோடு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) போன்ற சட்டப்பூர்வ அமைப்புகளின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பியும் தமிழக காங்கிரஸ் தலைவருமான மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில்:
”மத்திய அமைச்சரின் இந்த எழுத்துப்பூர்வ பதில் தமிழ்நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது. பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கும் தமிழக விவசாயிகளின் நலனுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுக்கும்” என்றார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/karnataka-mekedatu-project-issue-cauvery-water-dispute-supreme-court-cauvery-verdict-12203613





