30 07 2026
/indian-express-tamil/media/media_files/2026/07/29/indian-rupee-depreciation-2026-07-29-14-03-52.jpg)
ரூபாய் இனி 'ஓவர்வேல்யூ' இல்லை... இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல காலமா?
எழுதியவர்: ஹரிஷ் தாமோதரன்
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக கணிசமாக சரிந்துள்ளது. இதன் விளைவாக, முன்பு "அதிக மதிப்பிடப்பட்ட" (Overvalued) நாணயமாக இருந்த ரூபாய், தற்போது "குறைவாக மதிப்பிடப்பட்ட" (Undervalued) நாணயமாக மாறியுள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தித் துறைக்கு சாதகமான மாற்றமாக இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, ஜூலை 14-ஆம் தேதி ரூபாய் மீண்டும் ஒரு டாலருக்கு ரூ.96-ஐ கடந்தது. பின்னர் பதற்றம் ஓரளவு குறைந்ததும், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 85 டாலருக்கும் கீழ் சரிந்ததால், ரூபாய் மதிப்பு மீண்டு ஒரு டாலருக்கு சுமார் ரூ.95.9 என்ற அளவில் நிலைத்துள்ளது.
2026 மே 20-ஆம் தேதி ரூபாய் வரலாறு காணாத வகையில் ஒரு டாலருக்கு ரூ.96.96 என்ற குறைந்த மதிப்பை எட்டியது. அதேபோல், ஏப்ரல் 30-ஆம் தேதி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126.4 டாலரைத் தொட்டது. இருப்பினும், இந்த மாற்றங்களுக்கிடையில் ஒரு முக்கியமான விஷயம் தெளிவாகியுள்ளது. அதாவது, ரூபாய் இனி 'அதிக மதிப்பீடு' (Overvalued) கொண்ட நாணயம் அல்ல.
ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, "ரூபாய் தற்போது குறைவாக மதிப்பிடப்பட்ட நாணயமாக மாறியிருக்கலாம். மேற்கு ஆசியாவில் நிலைமை சீரான பிறகு, வெளிப்புற அதிர்ச்சிகள் குறைந்தால் ரூபாய் மீண்டும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
நீயர், ரீயர் (NEER, REER) என்றால் என்ன?
ஒரு நாட்டின் நாணயம் உண்மையில் அதிக மதிப்பில் உள்ளதா அல்லது குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை அறிய நியர் (NEER -Nominal Effective Exchange Rate) மற்றும் ரியர் (REER -Real Effective Exchange Rate) என்ற குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
நியர் (NEER) என்பது பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல், இந்தியாவின் முக்கிய வர்த்தக நாடுகளின் 40 நாணயங்களுடன் ரூபாயின் மதிப்பை ஒப்பிடும் குறியீடு.
ரியர் (REER) என்பது பணவீக்கத்தையும் சேர்த்து கணக்கிடப்படும் குறியீடு. ஒரு நாணயத்தின் உண்மையான போட்டித்திறனை இதுவே காட்டுகிறது.
இந்த இரண்டு குறியீடுகளுக்கும் 2015-16 = 100 என்பது அடிப்படை மதிப்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த 40 நாடுகள், இந்தியாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் சுமார் 88 சதவீத பங்கைக் கொண்டுள்ளன.
அதிக மதிப்பிலிருந்து குறைவான மதிப்புக்கு
2024 நவம்பரில், ஒரு டாலருக்கு ரூ.84.4 என்ற சராசரி மாற்று விகிதம் இருந்தபோது:
NEER - 91.68
REER - 108.03
ரீர் (REER) 100-ஐ விட அதிகமாக இருந்ததால், அப்போது ரூபாய் உண்மையான மதிப்பைவிட சுமார் 8 சதவீதம் அதிகமாக இருந்தது. இதனால் இந்திய பொருட்கள் உலக சந்தையில் விலை உயர்ந்ததாக மாறி, ஏற்றுமதி போட்டித்திறன் குறைந்தது.
ஆனால் 2026 மே மாதத்தில் டாலருக்கு எதிரான ரூபாயின் சராசரி மதிப்பு 95.5 ஆகக் குறைந்த போது, REER குறியீடு வரலாறு காணாத அளவாக 89.08 ஆகச் சரிந்தது.
2026 ஜூனில் ரியர் சிறிது உயர்ந்து 91.26 ஆகியிருந்தாலும், அது இன்னும் 100-க்கும் குறைவாகவே உள்ளது. அதாவது, ரூபாய் தற்போது உண்மையான மதிப்பைவிட சுமார் 8.7 சதவீதம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 2025 ஜூலை வரை 100-க்கும் மேல் இருந்த ரியர் தற்போது 100-க்கும் கீழ் வந்திருப்பதால், ரூபாய் "ஓவர்வேல்யூ" நிலையிலிருந்து "அண்டர் வேல்யூ" நிலைக்கு மாறியுள்ளது.
இதன் நன்மை என்ன?
ஒரு நாட்டின் நாணயம் குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கும்போது:
*இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாடுகளில் ஒப்பீட்டளவில் மலிவாக கிடைக்கும்.
*இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும்.
*வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுடன் இந்திய உற்பத்தியாளர்கள் எளிதாக போட்டியிட முடியும்.
*உள்நாட்டு உற்பத்தித் துறைக்கு ஊக்கம் கிடைக்கலாம்.
சீன யுவானை விடவும் குறைந்த மதிப்பீடு!
அமெரிக்காவின் 'சென்ட் லூயிஸ் ஃபெடரல் ரிசர்வ் வங்கி' வெளியிட்ட (RBEER- Real Broad Effective Exchange Rate) தரவுகளின்படி:
நவம்பர் 2024-ல் சீன யுவானின் RBEER குறியீடு 92.16 ஆக இருந்தது. அது இந்திய ரூபாயை விடக் குறைந்த மதிப்பீட்டில் இருந்ததால், உலக வர்த்தகத்தில் இந்தியாவை விட அதிகப் போட்டித்தன்மையுடன் இருந்தது.
ஆனால், ஜூன் 2026 நிலவரப்படி யுவானின் குறியீடு 92.24 ஆகவும், இந்திய ரூபாயின் குறியீடு 90.15 ஆகவும் உள்ளது. இதன் மூலம், இன்று இந்திய ரூபாய் சீன யுவானை விட அதிகச் சந்தைப் போட்டித்தன்மை கொண்ட (More Undervalued) நாணயமாக மாறியுள்ளது.
இனி என்ன நடக்கும்?
ரூபாய் மீண்டும் வலுப்பெற்று தனது "நியாயமான மதிப்பு" (REER 100) நிலையை அடையுமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அது மேற்கு ஆசியாவில் பதற்றம் குறைவது, கச்சா எண்ணெய் விலை நிலைபெறுவது, சர்வதேச கப்பல் போக்குவரத்து சீராக இயங்குவது மற்றும் புதிய சர்வதேச வர்த்தக பதற்றங்கள் உருவாகாதது போன்ற காரணிகளைப் பொறுத்தே அமையும்.
எனினும், தற்போது ரூபாய் உலக சந்தையில் அதிக போட்டித்திறன் பெற்ற நாணயமாக மாறியிருப்பது இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதனால் இந்தியாவின் ஏற்றுமதி உண்மையில் அதிகரிக்குமா, உள்நாட்டு உற்பத்தி இறக்குமதிக்கு எதிராக மேலும் வலுப்பெறுமா என்பது வரும் மாதங்களில் தான் தெளிவாக தெரியவரும்.
source https://tamil.indianexpress.com/explained/indian-rupee-depreciation-rupee-vs-dollar-exchange-rate-indian-rupee-value-rupee-vs-yuan-comparison-12208337





