வியாழன், 23 ஜூலை, 2026

ராஜினாமா செய்வதில் பிடிவாதம்: போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தையா?

 CJP leaders insist

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதில் பிடிவாதம்: போராடக்காரர்களுடன் பேச்சுவார்த்தையா? மத்திய அரசு மறுப்பு

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' உறுதியாக உள்ளது. இந்நிலையில், அந்த அமைப்பின் தலைவர்களுடன் தாமோ அல்லது மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கோ எந்தவொரு புதிய கட்டப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த முறை சந்திப்பின் போது மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்ததால், இந்த முறை நட்டாவின் அலுவலகத்திற்குச் செல்லப்போவதில்லை என அந்த அமைப்பின் தலைவர்கள் அறிவித்திருந்தனர். இதுகுறித்து அக்கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறுகையில், நாங்க யாருடைய அலுவலகத்திற்கும் செல்லப்போவதில்லை. ஜந்தர் மந்தர் அருகே பொதுவான ஒரு இடத்தில் வேண்டுமானால் சந்திக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஜந்தர் மந்தர் சாலையில் பொதுவான இடத்தில் மத்திய அமைச்சர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நடந்ததாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இன்று எந்த உரையாடலும் நடைபெறவில்லை என்று அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.


போராட்டக்காரர்கள் மீதான காவல் துறையின் தாக்குதலை கண்டித்து, நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ராகுல் காந்தி உடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கை அரசு உடனடியாக அனுப்பியது.

இதற்கிடையில், மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனம் வாங்சுக்கை, அமைச்சர்கள் ஜே.பி. நட்டாவும் ஜிதேந்திர சிங்கும் செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சென்று சந்தித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த வாங்சுக், சனிக்கிழமையன்று ஜந்தர் மந்தரிலிருந்து காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டார். அவர் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவரது மனைவி குற்றம்சாட்டியதை அடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சில நூறு பேருடன் ஆன்லைனில் சிறிய இயக்கமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது 2014-க்குப் பிறகு மோடி அரசு எதிர்கொள்ளும் மிகப்பெரிய இளைஞர் போராட்டமாக உருவெடுத்துள்ளது. சுமார் 20 லட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைத்த நீட் வினாத்தாள் கசிவு மற்றும் அதனால் ஏற்பட்ட தற்கொலைகள், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை மற்றும் தொடர் தேர்வு குளறுபடிகளால் பெரும் கொந்தளிப்பில் இருக்கும் இந்திய இளைஞர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் காரணியாக மாறியுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/centre-denies-fresh-talks-with-protesters-as-cjp-leaders-insist-on-dharmendra-pradhans-resignation-12189026