25 07 2026
/indian-express-tamil/media/media_files/2026/07/25/cocroch-party-2026-07-25-19-26-25.jpg)
மத்திய அரசுடன் உடன்பாடு: சி.ஜே.பி போராட்டம் வாபஸ்
நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ள நிலையிலும், தங்களின் பிற முதன்மைக் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து, 'காக்ரோச் ஜனதா கட்சி' (சி.ஜே.பி) தனது 36 நாள் போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் சி.ஜே.பி அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாகச் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் போலீசாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அரசு அவரது கோரிக்கைகளை ஏற்றதால் அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நீடித்து வந்த நிலையில், சி.ஜே.பியின் முக்கியக் கோரிக்கையை ஏற்று மத்தியக் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை பிற்பகல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது மற்றும் ஜூலை 20 வன்முறையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பிற கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என சி.ஜே.பி தலைவர் அபிஜீத் வலியுறுத்தினார். தொடர்ந்து, டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மத்திய அரசு பிரதிநிதிகளுக்கும் CJP நிர்வாகிகளுக்கும் இடையே 3-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்குப் பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் சி.ஜே.பி செய்தி தொடர்பாளர்கள் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மீது மத்திய அரசு மற்றும் என்.டி.ஏ (NDA) ஆட்சி செய்யும் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும். நீட் வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு விதிகளின்படி உரிய நிவாரணத் தொகை விரைவில் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும். சி.ஜே.பி அமைப்பு முன்வைத்துள்ள 5 அம்சக் கல்விச் சீர்திருத்தப் பட்டயத்தை அரசு பரிசீலிக்கும். இது குறித்து அடுத்த 4 வாரங்களில் மீண்டும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதையடுத்து, CJP கட்சி தனது போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து வீட்டிற்குத் திரும்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் முறைப்படி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் மூடப்பட்டிருந்த அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களும் உடனடியாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டன.
source https://tamil.indianexpress.com/india/jantar-mantar-protest-updates-cjp-calls-off-protests-in-good-faith-after-talks-with-centre-cjp-calls-off-36-day-protest-12197490





