எழுதியவர்: லிஸ் மேத்யூ
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதற்கு முன்பு, அவரை அமைச்சரவையில் தொடர வைத்தபடியே கல்வித் துறையிலிருந்து மட்டும் மாற்றும் சமரசத் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், "பிரதான் முழுமையாக ராஜினாமா செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) உறுதியாக இருந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக மேலிட வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளன.
36 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையில், தர்மேந்திர பிரதானிடம் இருந்து கல்வித் துறை மட்டும் மாற்றப்பட்டு, புதிய கல்வி அமைச்சர் நியமிக்கப்படுவார். ஆனால், அவர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவே தொடர்வார் என்ற சமரச யோசனையை அரசு முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த யோசனையை ஏற்றுக் கொண்டால், மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறலாம் என்றும், காக்ரோச் ஜனதா கட்சி வைத்திருந்த மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், காக்ரோச் ஜனதா கட்சி இந்த யோசனையை ஏற்க மறுத்தது. "அமைச்சக மாற்றம் மட்டும் போதாது; தர்மேந்திர பிரதான் முழுமையாக ராஜினாமா செய்ய வேண்டும்" என்ற நிலைப்பாட்டில் அக்கட்சி உறுதியாக இருந்ததாக சி.ஜே.பி. வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/28/cockroach-janta-party-2026-07-28-12-40-43.jpg)
அமைச்சரவையில் மாற்றம் செய்வது பிரதமரின் தனிப்பட்ட அதிகாரம் என்பதையும், அமைச்சரவை மாற்றத்தின் போது புதிய கல்வி அமைச்சர் நியமிக்கப்படலாம் என்பதையும் அரசு தரப்பு எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும், காக்ரோச் ஜனதா கட்சி தனது கோரிக்கையில் எந்த தளர்வும் காட்டவில்லை.
இதற்கிடையில், போராட்டக்காரர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதில் ஏற்பட்ட நீண்ட தாமதம் பேச்சுவார்த்தையை முட்டுக்கட்டைக்கு கொண்டு சென்றதாகவும், அதனால் காக்ரோச் ஜனதா கட்சி தனது நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கியதாகவும் கூறப்படுகிறது.
போராட்டம் தொடர்ந்து நீடித்ததுடன், பொதுமக்களின் அழுத்தமும் அதிகரித்தது. பல சுற்று பேச்சுவார்த்தைகளும் பலனளிக்காத நிலையில், இறுதியில் போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை பிற்பகல் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமாவை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 36 நாட்களாக டெல்லியில் நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டது.
source https://tamil.indianexpress.com/india/dharmendra-pradhan-resignation-cockroach-janta-party-cjp-student-protest-jp-nadda-12204186





