வியாழன், 1 ஏப்ரல், 2021

மியான்மர் அகதிகளுக்கு உணவு, மருத்துவம்: இந்திய எல்லைகளில் அனுமதி

 அண்டை நாடான மியான்மரில் உள்நாட்டு போர் உச்ச நிலையை எட்டியுள்ளது. கடந்த தசாப்தத்தின் மாபெரும் மனித இன அழிப்பாக இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு இருந்துள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களாக, மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மியான்மரில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், ஆங் சாங் சூகி வெற்றிப் பெற்றார். இந்நிலையில், நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறி, அந்நாட்டு ரானுவம் ஆட்சியை கலைக்க முற்பட்டு வருகிறது. மேலும், ஆங் சாங் சூகியை வீட்டுக் காவலில் வைத்துள்ளதோடு, மீண்டும் கண்ணியமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்படும் என மியான்மர் ராணுவம் கூறி வருகிறது.


இதனிடையே, ராணுவத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கும் மியான்மர் மக்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை அப்புறப்படுத்தி வருகிறது. இருப்பினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருகிறது. இது வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மர் ராணுவத்தின் இந்த செயலுக்கு, அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மியான்மர் உள்நாட்டு கலவரத்தால், அந்நாட்டு மக்கள் சிலர் இந்தியாவிற்கும் அடைக்கலம் நாடி வருவதாக தகவல் வெளியானது. தகவலை அடுத்து, மியான்மரில் இருந்து வருவோர்க்கு அடைக்கலம், உணவு உள்ளிட்டவைகளை வழங்கக் கூடாதென அந்நாட்டுடன் இந்திய எல்லைகளை பகிர்ந்துள்ள மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியது. மத்திய உள்துறையின் அறிவுறுத்தலை அடுத்து, மணிப்பூர் மாநிலத்தின் 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு அம்மாநில அரசு அகதிகளாக வருவோர்க்கு அடைக்கலம் வழங்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.. அரசின் இந்த உத்தரவு பல தரப்பு மக்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தனது உத்தரவினை மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

மேலும், மியான்மரிலிருந்து இந்திய எல்லைக்குள் வருவோர்க்கு உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்க மணிப்பூர் அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், உதவிகளைப் பெற்ற பின், அவர்களிடம் நிலைமயை எடுத்துரைத்து மியான்மருக்கே திருப்பி அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சில இடங்களில் அடைக்கலம் தருவதாகவும் தகவலக்ள் தெரிவிக்கின்றன.

source https://tamil.indianexpress.com/india/myanmar-army-rule-protest-kills-500-manipur-government-backlash-circular-287243/